Published : 23 Jan 2019 05:11 PM
Last Updated : 23 Jan 2019 05:11 PM

விஸ்வாசமா, பேட்டயா? வசூல் போட்டி தேவையில்லாதது: கார்த்திக் சுப்பராஜ் கருத்து

ஒரு படம் நன்றாக இருக்கிறதா, இல்லையா என்பதே முக்கியம், வசூல் விவரங்கள் எல்லாம் தேவையில்லாத வணிகமயமாக்கல் என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.

பொங்கலுக்கு 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' படங்கள் வெளியாகின. இரண்டு படங்களுமே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, சந்தையில் ஹிட் என அறிவிக்கப்பட்டாலும், எந்தப் படத்தின் வசூல் அதிகம் என ரசிகர்களிடையே போட்டா போட்டி நிலவியது. ஒரு கட்டத்தில் இரண்டு படத்தின் தயாரிப்பு தரப்புமே வசூல் விவரங்களை வைத்து போட்டி போட ஆரம்பித்துவிட்டன. 

தற்போது இது குறித்து 'பேட்ட' படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கருத்து தெரிவித்துள்ளார். 

"ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடச் செல்கிறோம். அங்கு சென்று வந்தவர் நம்மிடம் என்ன சொல்லி அனுப்புவார்? அங்கு போய் சாப்பிடு, அங்கு பிரியாணி நன்றாக இருக்கும் என்பார். இல்லையென்றால், அங்கு சாப்பிடாதே, சுவையாக இருக்காது என்பார். அந்தக் கடையில் இன்று காலையிலிருந்து 150 பிரியாணி வித்திருக்கிறார்கள். போய் சாப்பிடு என்று சொன்னால் நீங்கள் சாப்பிடுவீர்களா? எந்த ஹோடலிலாவது வெளியே, இன்று ஆயிரம் இட்லி விற்கப்பட்டது என்று அறிவிப்புப் பலகை வைத்துள்ளார்களா? இல்லையே. உணவு நன்றாக இருக்கிறதா, இல்லையா அது போதும். அதே போலதான் திரைப்படங்களும்.

படம் பிடித்திருக்கிறதா இல்லையா, நன்றாக இருக்கிறதா, சென்று பார்ப்போம். சில நன்றாக இல்லையென்றாலும் தியேட்டரில் படம் பார்ப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அவ்வளவே. 

இப்படி வசூலை வைத்துப் பேசுவது தேவையில்லாத வணிகமையமாக்கல் என்றே நான் பார்க்கிறேன். இப்படியான வசூல் நிலவரங்களைப் பற்றிப் பேசுவதெல்லாம் சில பேருக்கு தொழில். இதற்காகவே உருவாக்கப்பட்ட ஒரு தொழில். இப்படியான தகவல்களைப் போட்டு ட்ராக்கர்ஸ் என்பவர்கள் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் இப்படி பதிவிட்டு, அதைப் பார்த்து பலர் கெட்டுப்போய் அந்த எண்களை வைத்து படங்களை ஒப்பிடுகிறார்கள். அதை செய்யவே கூடாது. 

படத்தைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆரோக்கியமாக விவாதிக்கலாம். ஆனால் வசூலைப் பற்றி ஏன் பேச வேண்டும்?

எல்லா படங்களுமே வசூலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக பேட்ட படத்தின் வசூல் குறித்து அனைத்து தரப்புமே மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ட்விட்டரில் இருக்கும் உலகம் வேறு, திரையரங்கில் நடப்பது வேறு. திரையரங்கில் வசூல் நன்றாக இருக்கிறது. நமக்கு அது போதும். அங்கு தான் நிஜ ரசிகர்கள் இருக்கின்றனர். ட்விட்டரில் ரசிகர்கள் இல்லை. இதை வைத்து பிழைப்பு நடத்துபவர்களே இருக்கின்றனர்" என்று கார்த்துக் சுப்பராஜ் கூறியுள்ளார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x