Published : 26 Dec 2018 12:42 PM
Last Updated : 26 Dec 2018 12:42 PM

தனுஷின் ‘அசுரன்’ படத்துக்கு இசையமைக்க ஜீ.வி.பிரகாஷிடம் பேச்சுவார்த்தை

தனுஷ் நடிக்கவுள்ள ‘அசுரன்’ படத்துக்கு இசையமைக்க ஜீ.வி.பிரகாஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ரிலீஸான படம் ‘வடசென்னை’. மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் மட்டும் தற்போது ரிலீஸாகியிருக்கிறது. அடுத்து இரண்டு பாகங்கள் நிலுவையில் உள்ளன.

‘வடசென்னை’ முதல் பாகத்துக்கு வரவேற்பு கிடைத்த போதிலும், அடுத்த பாகத்தை உடனே இயக்காமல், இடையில் தனுஷை வைத்து வேறொரு படம் இயக்க இருப்பதாக வெற்றிமாறன் தெரிவித்தார். பூமணி எழுதிய வெக்கை நாவலைப் படமாக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

சில நாட்களுக்கு ‘அசுரன்’ என புதிய படத்தின் தலைப்பை அறிவித்தனர். தனுஷ் நடித்து, இயக்கிவந்த படம், தேனாண்டாள் ஃபிலிம்ஸுக்கு ஏற்பட்டுள்ள பைனான்ஸ் பிரச்சினையால் நின்றுவிட, ஜனவரி மாதமே ‘அசுரன்’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க இருக்கின்றனர்.

இந்நிலையில், இந்தப் படத்துக்கு இசையமைக்க ஜீ.வி.பிரகாஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ‘மயக்கம் என்ன’ படத்தின்போது ஏற்பட்ட மனக்கசப்பால் தனுஷ் - ஜீ.வி.பிரகாஷ் இருவரும் பேசிக் கொள்வதில்லை. அதனால் தான், ‘வடசென்னை’யில் ஜீ.வி.பிரகாஷுக்குப் பதில் சந்தோஷ் நாராயணனை இசையமைக்க வைத்தார் தனுஷ்.

ஆனால், வசந்தபாலன் இயக்கத்தில், ஜீ.வி.பிரகாஷ் நடித்து, இசையமைத்து வரும் ‘ஜெயில்’ படத்தில் ஒரு பாடலைத் தனுஷைப் பாடவைத்து, இருவரையும் ஒன்று சேர்த்து வைத்துள்ளார் வசந்தபாலன். இதன்மூலம் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ளனர். எனவே, அடுத்து தனுஷ் நடிக்கும் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கலாம் என்று கூறப்பட்டது. அது ‘அசுரன்’ படத்திலேயே அமைந்துவிடலாம் என்கிறார்கள்.

வெற்றிமாறன் இயக்கத்தில் இதுவரை வெளியான ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘விசாரணை’ ஆகிய படங்களுக்கு ஜீ.வி.பிரகாஷ் தான் இசையமைத்தார். தனுஷ் - ஜீ.வி. இடையிலான பிரச்சினை காரணமாக ‘வடசென்னை’ படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க நேரிட்டது. இப்போது இருவரும் ஒன்று சேர்ந்துவிட்டதால், வெற்றிமாறன் மறுபடியும் தன்னுடைய ஆஸ்தான இசையமைப்பாளரான ஜீ.வி.பிரகாஷையே இசையமைக்க வைக்க முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x