Published : 07 Dec 2018 09:20 AM
Last Updated : 07 Dec 2018 09:20 AM

நெல் ஜெயராமன் வாழ்க்கையைப் பாடமாக்க வேண்டும்: இயக்குநர் தங்கர் பச்சான் கோரிக்கை

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன், சிகிச்சை பலனின்றி நேற்று (வியாழக்கிழமை) அதிகாலையில் மரணம் அடைந்தார்.

கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக கடும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார் ஜெயராமன். அவரது நிலையை உணர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், கார்த்தி, சிவகார்த்திகேயன், சூரி உள்ளிட்ட திரைப்படக் கலைஞர்கள் அவரது சிகிச்சைக்கு உதவினர். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

நெல் ஜெயராமனின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குநர் தங்கர் பச்சானும் தன்னுடைய இரங்கலைப் பதிவு செய்துள்ளார். “எல்லாவற்றையும் செய்ய ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால், இவர் விட்டுச்சென்ற பணியைச் செய்ய யார் இருக்கிறார்கள்? மரபு மாற்றுப் பயிர்களுக்கு எதிராகப் போராடியவர். அடுத்த தலைமுறைகளுக்காகவே வாழ்ந்தவர்.

நெல் ஜெயராமன் விட்டுச் சென்ற பணியை அரசு தொடர வேண்டும். எதை எதையோ பள்ளிப் பாடங்களில் கற்றுத் தருபவர்கள், விவசாயம் குறித்து கட்டாயம் மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். தமிழக முதல்வர், வேளாண்மை அமைச்சர், பள்ளிக்கல்வி அமைச்சர் அனைவருமே உழவு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். எனவே, அவர் விட்டுச்சென்ற பணியைத் தொடர வேண்டிய கடமை இருக்கிறது.

நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை, பள்ளி மாணவர்களுக்குப் பாடமாக்க வேண்டும். அதுதான் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார் தங்கர் பச்சான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x