Published : 29 Dec 2018 12:44 PM
Last Updated : 29 Dec 2018 12:44 PM

எனது மெட்டுகள் எல்லாம் ஒரே மாதிரி இருப்பதேன்?!- ஹாரிஸ் ஜெயராஜ் பேட்டி

கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘தேவ்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். 2018-ம் ஆண்டு ஹாரிஸ் ஜெயராஜுக்குப் பெரிய அளவில் ஹிட்களைத் தரவில்லை என்றாலும், ஆண்டின் இறுதியில் வெளியாகும் ‘தேவ்’ நல்ல வரவேற்பைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், பல்வேறு கேள்விகளுக்கு சுவாரஸ்ய பதில் அளித்திருக்கிறார்.

 

உங்களுடைய எல்லாப் பாடல்களும் ஒரே மாதிரியாக இருப்பதாக விமரசனங்கள் வருகின்றனவே?

ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் ஓர் அடையாளம் இருக்கும். நீங்கள் ஒரு பாட்டைக் கேட்டவுடன், இது ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் என்று உங்களுக்குத் தோன்றுகிறது அல்லவா... அதுதான் எனது வெற்றி. அதுதான் எனது தனித்துவ அடையாளம். என்னிடம் சொல்லாமல் ஹான்ஸ் ஜிம்மர் பாடலை எனக்கு யாரேனும் ஒலித்துக் காட்டினால், உடனே அது அவருடையதுதான் என்று சரியாகச் சொல்லிவிடுவேன்.

 

இயக்குநர்களுடனான உங்கள் உறவின் முக்கியத்துவம் பற்றி நிறைய முறை பேசியிருக்கிறீர்கள். ‘தேவ்’ இயக்குநர் ரஜத் ரவிசங்கருடனான அனுபவத்தைச் சொல்லுங்கள்?

எனக்கு அந்தக் கதை மிகவும் பிடித்தது. ஒரு படத்தின் கேப்டன் இயக்குநர்தான் என்பதை நான் எப்போதுமே நம்புகிறேன். அவர்தான் எல்லாத்துக்குமே பொறுப்பு. ரஜத்துக்கு நல்லதொரு தொலைநோக்குப் பார்வை இருக்கிறது. தனது படத்தின் கருவை அழகாக வடிவமைக்கிறார். படத் தயாரிப்பாளர் லக்‌ஷ்மண் குமாரும் அதற்கு உறுதுணையாக இருக்கிறார். இருவரும் கணவன் - மனைவி போல் இணைந்து வேலை செய்கின்றனர். நாங்கள் எல்லோரும் குழந்தைகள்.

 

‘தேவ்’ படம், ஹாரிஸ் பிராண்ட் ஆஃப் மியூஸிக்குக்கு உயிர் கொடுத்திருக்கிறதா?

அதை எனது பிராண்ட் ஆஃப் மியூஸிக் என்று அடையாளப்படுத்த மாட்டேன். ஆனால், இளமை ததும்பும் படங்களுக்கு இசையமைத்தல் எனக்கு மிகவும் பிடித்தமானது. இளமையான கதைகளுக்கு இசையமைத்தல் சுவாரஸ்யம். நாம் நமது இதயத்திலிருந்து வேலை செய்யலாம். கோடம்பாக்கம் விதிகளை இங்கே பின்பற்ற வேண்டிய அவசியம் இருக்காது. கெளதம் மேனன், ஜீவா போன்ற இயக்குநர்களுடன் அப்படித்தான் நான் பணியாற்றியிருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் நான் அப்படிப்பட்ட இளமையான படங்களைப் பார்க்கவில்லை.

 

ஆனால், ‘நண்பன்’ படத்துக்கு இசையமைத்தீர்களே...

அது ஒரு சூப்பர் ஸ்டாருக்காக செய்தது. ஒரு இளைஞரின் கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் நடித்திருந்தார். அதனால், ரசிகர்களின் விருப்பத்துக்கு ஏற்ப இசையமைக்கும் கட்டாயம் இருந்தது. அதேவேளையில், ‘உள்ளம் கேட்குமே’, ‘12பி’ அல்லது ‘தேவ்’ கூட கேட்டுப் பாருங்கள். எந்த ஒரு பாடலுக்கும் அங்கே நிபந்தனை இருந்திருக்காது.

 

நீங்கள் நிறைய சூப்பர் ஹிட் பாடல்களை சூர்யாவுக்குத் தந்திருக்கிறீர்கள். அவரது சகோதரர் கார்த்தியுடன் இதுதான் முதல் படம் அல்லவா?

நான் கார்த்தியைச் சந்தித்த போதெல்லாம், எனது இசையில் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்று சொல்வார். அது அமையாமலேயே இருந்தது.  இப்போது ‘தேவ்’ அதற்கான தளத்தை அமைத்தது. கார்த்தி நிறைய முரட்டுத்தனமான கதைகளில் நடித்திருக்கிறார். அதனாலேயே எனது இசையில் உள்ள படத்தில் நடித்தால், தான் இன்னும் மிடுக்காகத் தெரிவேன் என்று சொல்வார். எங்களை இணைத்த ‘தேவ்’ படத்துக்கு நன்றி.

 

கடந்த 2 ஆண்டுகளில் நீங்கள் படங்களின் எண்ணிக்கையைவிட, பாடல்களின் தரத்தில்தான் கவனம் செலுத்தினீர்கள் என்று சொல்லலாமா?

18 ஆண்டுகளாகவே நான் அதைத்தான் செய்கிறேன். எத்தனைப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் என்று நான் என்றும் எண்ணிப் பார்த்ததில்லை. ஆண்டுக்கு மூன்று படங்களுக்கு மேல் நான் இசையமைப்பதில்லை. 2009-ல் ‘ஆரஞ்சு’ என்ற ஒரே ஒரு படம்தான் ரிலீஸ் ஆனது.

இதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ‘மின்னலே’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகும்போதே நான் மிகவும் சோர்ந்துவிட்டேன். ஏனெனில், அதற்கு முன்னர் பல்வேறு மொழிகளிலும் சுமார் 600 படங்களுக்கு நான் இசைக்கலைஞராக வேலை செய்திருக்கிறேன். நான் கீபோர்ட் ப்ளேயராக இருந்தபோது, ரொம்பவே பிஸியாக இருந்தேன். ஒரு படத்துக்கான கீபோர்ட் இசை வேலையை, இரண்டு நாட்களில் முடித்துக் கொடுப்பேன். அப்போது தரத்தின் மீது கவனம் இருக்காது. எத்தனை ப்ராஜக்ட்களை முடிக்கிறோம் என்ற எண்ணிக்கைதான் மனதில் ஓடும்.

எனது இளமைப் பருவத்தை அப்படிப்பட்ட வேலையில் சிக்கி தொலைத்துவிட்டேன். ஏன்... கொன்றுவிட்டேன் என்றுகூடச் சொல்லலாம். அதனால், இசையமைப்பாளர் ஆனவுடனேயே எனக்கு நானே ஒரு கட்டுப்பாடு விதித்தேன். தரத்தின் மீது கவனம் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஒரு படம் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் ஆகாமல் போகலாம். ஆனால், இசை அப்படியல்ல. பெயரே தெரியாத படத்தின் பாடல்கூட நம் நினைவில் நிற்கும் அல்லவா?

 

கோலிவுட்டில் வெள்ளிதோறும் ஒரு இசையமைப்பாளர் முளைக்கிறார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இதை நான் நேர்மறையான விஷயமாகவே பார்க்கிறேன். ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும், அவருக்கான இடம் கிடைக்கிறது. அது அவரவர் திறமை மற்றும் முந்தைய வெற்றிகளைப் பொறுத்து அமைகிறது. ஒருவருக்கான பட வாய்ப்புகளை அடுத்தவர் யாரும் தட்டிப் பறிக்க முடியாது.

 

உங்களது முக்கிய விமர்சகர் யார்?

எனது இயக்குநர்தான் எனது மிகப்பெரிய முக்கியமான விமர்சகர். அவரின் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்த்துவிட்டால் போதும், எல்லாத்தையும் ஓரங்கட்டிவிட்டு ஒரு சின்ன நடைபோட்டு ஏதாவது சாப்பிடச் சென்றுவிடுவேன். அடுத்த நாள் அதை நாங்கள் மீண்டும் கேட்போம். அப்போது ஒரு சினிமா ரசிகனாக பாடலைக் கேட்பேன். அது என்னை திருப்திப்படுத்துகிறதா என்பதை சோதிப்பேன்.

ஒரு பாடலுக்காக மிகவும் மெனக்கிட்டேன் என்று சொல்லும் அளவுக்கு ஏதேனும் பாடல் இருக்கிறதா?

அப்படி ஒரு பாடலை மிகுந்த சிரத்தையுடன் மீண்டும் மீண்டும் செதுக்கிக்கொண்டே இருக்கிறீர்கள் என்றால், அடிப்படையில் அந்த மெட்டில் ஏதோ பிரச்சினை இருக்கிறது. ஒரே மெட்டின் மீது 100 நாட்கள் வேலை செய்கிறீர்கள் என்றால், அதற்காக அந்தப் பாடல் சூப்பர் ஹிட் ஆகிவிடும் என்று அர்த்தமில்லை. ஒரே வீச்சில் முடியும் ரெக்கார்டிங்கில்தான் அற்புதங்கள் நிகழும். அதன்பின்னர் அதில் நீங்கள் செலவழிக்கும் நேரம் மேம்படுத்துதலாக இருக்க வேண்டுமே தவிர, மாற்றியமைத்தலுக்கானதாக இருக்கக் கூடாது.

 

தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப மியூஸிக் ஸ்டுடியோ தரத்தை மாற்றி அமைத்தல் அவசியம். தமிழ்த்திரையுலகில் உங்களது ஸ்டுடியோவுக்கு பெரிய அந்தஸ்து இருக்கிறது. இதன் முக்கியத்துவம் பற்றி சொல்லுங்களேன்...

எனது ஸ்டுடியோவுக்கு வந்து ஒரு பாட்டைக் கேட்டால், அவர்கள் காது நிரம்ப வேண்டும் என நினைப்பேன். அந்த வகையில் உலகத்தரத்தில் இந்த ஸ்டுடியோவை கட்டமைக்க இறைவன் எனக்கு அருள் புரிந்தமைக்கு நான் நன்றி சொல்கிறேன். ஆசியாவிலேயே சிறந்த ஸ்டுடியோ என்னுடையதுதான் என இசை நாளிதழ் ஒன்று தரச்சான்று அளித்திருக்கிறது. அதேவேளையில், ஒரு மெட்டு சரியாக அமையவில்லை என்றால் எந்தத் தொழில்நுட்பத்தாலும் அதை ஈடுகட்ட முடியாது.

 

தமிழ் ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் பலரும் உங்கள் இசையைக் கிண்டல் செய்கிறார்களே... அது உங்களுக்குத் தெரியுமா?

ஆமாம், நானும் அதைப் பார்த்திருக்கிரேன். ஒரு விஷயத்தை அழகாக, கோர்வையாகச் சொல்வது அவர்கள் பணி. அவர்கள் திறமையை நான் பாராட்டுகிறேன். ஆனால், அவர்கள் நோக்கத்தை அல்ல.

 

தமிழில்: பாரதி ஆனந்த்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x