Published : 31 Dec 2018 02:32 PM
Last Updated : 31 Dec 2018 02:32 PM

திரும்பிப் பார்க்கிறோம் 2018: ஒரு படம் கூட ரிலீஸ் செய்யாத அஜித்

2018-ம் ஆண்டில் முன்னணி நடிகர்கள் குறைந்தது ஒரு படமாவது ரிலீஸ் செய்த நிலையில், அஜித்தின் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘விவேகம்’. சிவா இயக்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் நடித்த படம் இது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி.ஜி.தியாகராஜன் இந்தப் படத்தைத் தயாரித்து, விநியோகம் செய்தார்.

அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்த இந்தப் படத்தில், வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் நடித்தார். முக்கியக் கதாபாத்திரங்களில் அக்‌ஷரா ஹாசன், கருணாகரன், ‘லொள்ளு சபா’ சாமிநாதன் ஆகியோர் நடித்தனர்.

சிவா கதை எழுத, சிவா, கபிலன் வைரமுத்து மற்றும் ஆதி நாராயணா ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதினர். வெற்றி ஒளிப்பதிவில், ரூபன் எடிட்டிங்கில், அனிருத் இசையில், 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24-ம் தேதி ‘விவேகம்’ வெளியானது.

ஆக்‌ஷன் ஸ்பை படமான இது, பெரும்பாலான அஜித் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை. குறிப்பாக, க்ளைமாக்ஸ் காட்சியில் காஜல் அகர்வால் சாமி பாட்டுக்கு ஆட, அஜித் வில்லனைத் துவம்சம் செய்வதெல்லாம் மிகப்பெரிய காமெடியானது. இதனால், இந்தப் படம் தோல்வியைத் தழுவியது.

இந்த தோல்விக்காகத்தான் மறுபடியும் சத்யஜோதி ஃபிலிம்ஸுக்கு கால்ஷீட் கொடுத்து, தற்போது ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்துள்ளார் அஜித். இந்தப் படம் அறிவிக்கப்பட்டபோது, 2018-ம் ஆண்டு தீபாவளி ரிலீஸ் என்றுதான் அறிவித்தனர்.

ஆனால், ஷூட்டிங் ஆரம்பிக்க நினைத்த நேரத்தில் சரியாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஸ்டிரைக்கை அறிவித்தது. எனவே, ஷூட்டிங் தேதி தள்ளிப்போக, அதனால் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப்போய், 2018-ல் ஒரு படம் கூட ரிலீஸ் செய்யாத முன்னணி நடிகராக அஜித் இருக்கிறார்.

இருந்தாலும், இந்த ஒரு வருடக் காத்திருப்பின் பலனாக, வருகிற (2019) ஜனவரி 10-ம் தேதி ‘விஸ்வாசம்’ படம் ரிலீஸாக இருக்கிறது. நேற்று (டிசம்பர் 30) வெளியான இந்தப் படத்தின் ட்ரெய்லரே பட்டையைக் கிளப்பி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், படத்துக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர் அஜித் ரசிகர்கள்.

‘விஸ்வாசம்’ படத்தில் தூக்கு துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அஜித். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, ஜெகபதி பாபு, விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வெற்றி ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, ரூபன் எடிட் செய்துள்ளார். ஒரு வருடத்துக்கும் மேல் காத்திருக்கும் அஜித் ரசிகர்களுக்கு விசுவாசமாய் அமையப் போகிறது இந்த ‘விஸ்வாசம்’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x