Published : 19 Nov 2018 12:55 PM
Last Updated : 19 Nov 2018 12:55 PM

இலங்கைத் தமிழர்கள் படுகொலை பற்றி ஒரு படைப்பு கூட வரவில்லை என்ற வருத்தம் உண்டு: திருமுருகன் காந்தி

இலங்கைத் தமிழர்கள் படுகொலை பற்றி ஒரு படைப்பு கூட வரவில்லை என்ற வருத்தம் உள்ளதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வால் பலியான அனிதாவின் மரணக் கதையை மையமாக வைத்து ‘அநீதி’ என்ற குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் ‘ராஜா ராணி’ பாண்டியன், பிரதீப் கே.விஜயன், லல்லு, கேப்ரிலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.சி.பால சாரங்கன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு, விஸ்வா மற்றும் ஹரி பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

அநீதிக்குத் தீர்வு மரணம் அல்ல என்பதை வலியுறுத்தும் வகையில் அமைந்திருக்கிறது இப்படம். ஸ்ரீராம் காஞ்சனா தங்கராஜ் என்பவர் இயக்கி இருக்கும் இப்படத்தின் திரையிடல், சென்னையில் நேற்று (நவம்பர் 18) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி, “இங்கு இருக்கும் அனைவரையுமே தோழர்களாகத்தான் பார்க்கிறேன். இந்தக் குறும்படம் விருதுகள் வாங்கியதற்காக நான் வரவில்லை. இந்தப் படத்தின் கதை தாங்கி நின்ற துயரம் நம் அனைவருக்கும் தெரியும்.

இந்தப் படத்தில் வந்த ஒருகாட்சி, காவி உடை அணிந்த ஒருவர் பஸ்ஸில் போகும்போது எச்சில் துப்புகிறார். அந்த எச்சில், ‘தமிழன்டா’ என்ற பனியன் போட்டிருந்த பையன் மீது விழுகிறது. இந்த ஒரு காட்சியே உண்மையை உணர்த்தி விட்டது.

அனிதாவின் மரணத்தின்போது நான் சிறையில் இருந்தேன். சிறையிலே கொந்தளிப்பான மனநிலையில் இருந்தேன். சிறையில் பல்வேறு குற்றங்களுக்காக கைதாகி இருந்த கைதிகள் ஒன்று கூடி, அனிதா மரணத்துக்கு நீதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்தோம். சிறையில் இருந்தவர்களையே அந்த அளவுக்குப் பாதிக்கச் செய்த சம்பவம் அது.

ஒரு தேசத்தில் அறம் இல்லாவிட்டால், அந்தத் தேசத்தின் மொழியில் உயிர் இருக்காது என்று ஒரு இலங்கை கவிஞர் சொன்னார். படைப்புலகம் இதுபோன்ற கொலைகளைப் பதிவு செய்யும் போதுதான், அது பரவலாகப் போய்ச்சேரும். எனக்கு ஒரு வருத்தம் உண்டு. 9 ஆண்டுகள் கடந்துவிட்டன ஈழத்தில் படுகொலைகள் நடந்து. இதுவரை அதைப்பற்றி ஒரு படைப்பு கூட வரவில்லை என்ற வருத்தம் உண்டு.

இந்தக் குறும்படத்தை கொங்கு மண்டலத்தில் எடுத்திருக்கிறார்கள். கொங்கு மண்டலத்தில் ஒரு அம்பேத்கர் சிலையைக் கூடப் பார்க்க முடியவில்லை. இந்திய அரசியல் அமைப்புச் சட்டமே மனு தர்மத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கிறது. பெரியாரையும் அம்பேத்கரையும் கொஞ்சம் படித்தாலே நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். ஊரும் சேரியும் இருக்கும்வரை இந்தச் சமூகம் முன்னேறும் தகுதியற்றது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x