Published : 23 Oct 2018 01:09 PM
Last Updated : 23 Oct 2018 01:09 PM

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம்: லிங்குசாமி இயக்குகிறார்

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை லிங்குசாமி இயக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறைப் படமாக எடுக்க, தமிழ் சினிமாவில் பலத்த போட்டி நிலவுகிறது. இயக்குநர்கள் பாரதிராஜா, விஜய் மற்றும் பிரியதர்ஷினி ஆகிய மூவரும் தனித்தனியாக ஜெ.வின் வாழ்க்கையைப் படமாக எடுக்க இருக்கின்றனர்.

மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றிய பிரியதர்ஷினி, ‘த அயர்ன் லேடி’ (The Iron Lady) என்ற பெயரில் ஜெ.வின் வாழ்க்கையைப் படமாக எடுக்கிறார். இந்தப் படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். சசிகலா கதாபாத்திரத்தில் நடிக்க வரலட்சுமி சரத்குமாரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி இந்தப் படம் தொடங்க இருப்பதாகக் கூறியுள்ளார் பிரியதர்ஷினி. இதேநாளில் விஜய் இயக்கும் படமும் தொடங்கப்பட இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. பாரதிராஜா எப்போது தொடங்கப் போகிறார் எனத் தெரியவில்லை.

இந்நிலையில், லிங்குசாமியும் ஜெ.வின் வாழ்க்கை வரலாற்றை இயக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார் ஜெயானந்த் திவாகரன். இதுகுறித்து முகநூலில் பதிவிட்டுள்ள அவர், “அம்மாவின் வாழ்க்கை வரலாறு, தனித்துவம் கொண்ட இயக்குநரும், எனது நண்பருமான லிங்குசாமியால் படமாக்கப்படும்.

இதில், நடராஜன் மற்றும் சின்னம்மாவின் கதாபாத்திரங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தமிழக அரசியல் தலைவர்களுடன், இயக்குநர் பல செய்திகளின் உண்மைத்தன்மை அறிந்து, தகுந்த ஆதாரங்களுடன் இப்படம் எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

லிங்குசாமி இயக்கத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சண்டக்கோழி 2’ படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x