Published : 09 Oct 2018 06:24 PM
Last Updated : 09 Oct 2018 06:24 PM

சிம்பு படத்தில் யோகி பாபு

சிம்பு நடித்துவரும் புதிய படத்தில், யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பவன் கல்யாண் இயக்கத்தில் 2013-ம் ஆண்டு ரிலீஸான தெலுங்குப் படம் ‘அத்தரண்டிகி தாரேதி’. சமந்தா மற்றும் ப்ரணிதா இரண்டு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் நடித்தனர். நதியா, பொமன் இரானி, பிரம்மானந்தம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

சூப்பர் ஹிட்டான இந்தப் படம், தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. சுந்தர். சி இந்தப் படத்தை இயக்க, சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். சமந்தா நடித்த வேடத்தில் மேகா ஆகாஷ் நடிக்கிறார். ப்ரணிதா வேடத்தில் கேத்ரின் தெரேசா நடிக்கிறார். நதியா நடித்த ஹீரோவின் அத்தை வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் ஷூட்டிங், கடந்த 17-ம் தேதி ஜார்ஜியாவில் தொடங்கியது. முதல் ஷெட்யூல் முடிந்த நிலையில், சில நாட்கள் பிரேக் விடப்பட்டது. அந்தச் சமயத்தில் தான் ‘பிக் பாஸ்’ பிரபலங்களுடன் இணைந்து தான் நடித்த ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தைப் பார்த்தார் சிம்பு.

இந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் கடந்த வாரம் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிக்கிறார். விஜய்யின் ‘சர்கார்’, அஜித்தின் ‘விஸ்வாசம்’ என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள யோகி பாபு, தற்போது சிம்புவுடனும் நடிக்கிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், அடுத்த ஆண்டு திரைக்கு வர இருக்கிறது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x