Published : 23 Oct 2018 10:52 AM
Last Updated : 23 Oct 2018 10:52 AM

அதிர்ச்சி அளிக்கும் ‘மீ டூ’ - தவறாக பயன்படுத்தப்படாமல் இருக்க இணைய நீதிமுறை: ஏ.ஆர். ரஹ்மான் யோசனை

 

அடுத்தடுத்து எழுந்து வரும் ‘மீ டூ’ புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் இது தவறாக பயன்படுத்தப்படாமல் இருக்க இணைய நீதிமுறை அவசியம் என இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.

பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லாமல் புழுங்கிக்கொண்டிருந்த பெண்கள், மீ டூ (#MeToo) மூலம் தற்போது தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறி வருகின்றனர். இதில் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், திரையுலகினர் என பலதுறை சார்ந்தவர்களும் புகார் எழுப்பி வருகின்றனர். மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் பெண் பத்திரிகையாளர்கள் சிலர் புகார் தெரிவித்ததால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தமிழக திரையுலகிலும், கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி, இயக்குநர் சுசி கணேசன்மீது பாலியல் புகாரை கவிஞர் மற்றும் இயக்குநர் லீனா மணிமேகலை பாலியல் புகார் கூறினார்.

இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் மீ டூ பற்றி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் ‘‘மீ டூ’ இயக்கத்தை தொடர்ந்து கவனித்து வருகிறேன். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சிலரது பெயர்களைப் பார்க்கும் போது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. திரைத்துறையைப் பொறுத்த வரையில், நேர்மையாகவும், பெண்களை பெரிதும் மதிக்கும் துறையாகவும் செயல்படவே நான் விரும்புகிறேன்.

பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது குரல் ஓங்க முன்வர வேண்டும். நானும் என்னுடைய குழுவினரும் எங்களுடன் பணிபுரியும் அனைவருக்கும் பாதுகாப்பான, நல்ல முறையில் பணிபுரிவதற்கான சூழலையே ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.

பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களது குரலை எழுப்ப சமூக வலைதளங்கள் நல்ல வாய்ப்பையும் சுதந்திரத்தையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆனால், அது தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதற்காக அதற்கு ஒரு இணைய நீதிமுறை கொண்டு வர வேண்டும்’’ என ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x