Published : 15 Jul 2018 06:37 PM
Last Updated : 15 Jul 2018 06:37 PM

‘பேரன்பு’ படத்தில் யார் யார் என்னென்ன வேடத்தில் நடித்திருக்கிறார்கள் தெரியுமா?

‘பேரன்பு’ படத்தில் யார் யார் என்னென்ன வேடத்தில் நடித்திருக்கிறார்கள் என்ற விவரம் வெளியாகியிருக்கிறது.

ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பேரன்பு’. மம்மூட்டி, அஞ்சலி, சாதனா, அஞ்சலி அமீர் ஆகியோர் நடித்துள்ளனர். பி.எல்.தேனப்பன் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பல உலகத் திரைப்பட விழாக்களிலும் இந்தப் படம் பங்கேற்றுள்ளது.

இந்தப் படத்தில் யார் யாருக்கு என்ன வேடம் என்ற விவரம் வெளியாகியுள்ளது. அமுதவன் என்ற வேடத்தில் 13 வயது பெண் குழந்தைக்கு அப்பாவாக நடித்துள்ளார் மம்மூட்டி. அவருடைய பார்வையில் இந்தப் படத்தில் நடித்துள்ளவர்களின் வேடங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

‘நீங்க எவ்வளவு நல்ல ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கீங்கனு நீங்க புரிஞ்சுக்கறதுக்காக என் வாழ்க்கையில நடந்த சில சம்பவங்களத் தேர்ந்தெடுத்து இந்தக் கதைய நான் எழுதறேன்’ எனத் தொடங்குகிறார் அமுதவன் என்கிற மம்மூட்டி.

‘தங்க மீன்கள்’ படத்தில் வாயாடி செல்லம்மாவாக தேசிய விருது வாங்கிய சாதனா, இந்தப் படத்தில் பேசவே வராத பாப்பாவாக நடித்துள்ளார். ‘என் பொண்ணு, பேரு பாப்பா. வயசு 13. மருந்து கொடுத்து குணப்படுத்தறதுக்கு, பாப்பாக்கு இருக்கறது நோயில்ல. இப்படித்தான் பொறந்தா, இப்படியேதான் இருப்பா. ஒரு புல் எப்படி செடியாக முடியாதோ... அப்படி. பாப்பாவுக்கு இருக்குற குறைக்கு மனுசங்க கண்டுபிடிச்ச பேரு மூளை முடக்குவாதம். அவ எனக்கு கத்துக் கொடுத்த விஷயங்களுக்கு நான் வச்ச பேரு பேரன்பு’.

‘கற்றது தமிழ்’ படத்தில் ‘நிஜமாதான் சொல்றியா...’ என்று ஆனந்தியாகத் தொடங்கிய அஞ்சலி, தமிழ்த் திரையுலகிற்கு வந்து பத்து ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. ‘தெய்வம் இருக்கிறதா, இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால், தேவைப்படும் சமயத்தில் வருமா என்றால், நிச்சயமாக வரும் என்பது எனக்குத் தெரியும். அப்படி வந்தது விஜி என்கிற இந்த விஜயலட்சுமி’.

கேரளாவில் உள்ள ‘காராடி’ என்கிற குக்கிராமத்தில் மரபுவழிப்பட்ட இஸ்லாம் சமூகத்தில் ஜம்சீராக இருந்த தன்னை, அஞ்சலி அமீராகத் தானே கண்டெடுத்த இவருடைய வாழ்வு புரட்சிகரமானது, அரிதானது, போற்றுதலுக்குரியது. ‘ஆண், பெண் என்ற பால் பிரிவிற்குள் அடங்காதவர். உலகம் எத்தனை தூற்றினாலும், வாழ்வின் மகத்துவத்தைப் போற்றும் ஒரு குழந்தையின் மனதை உலகிற்குத் தருபவர். பேரன்பில் இவர் பெயர் மீரா’.

‘என் பாப்பாவோட குதிரை. இந்த வெள்ளக்குதிரையோட பேரு நெயில் பாலிஷ். எந்த மொழியும் தெரியாத என் பாப்பாவோட பாஷை இதுக்கு ரொம்ப நல்லா தெரியும்.’

“மக்களின் வலிகளையும் சந்தோஷத்தையும் பாடுவதற்குத்தான் நாங்க இருக்கோம்” - செந்தில் கணேஷ் பேட்டி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x