Published : 11 Jun 2018 08:22 PM
Last Updated : 11 Jun 2018 08:22 PM

விஸ்வரூபம் 2, முதல் பாகத்தின் நீட்சி மட்டுமல்ல... முன்கதையும் கூட: கமல்ஹாசன்

'விஸ்வரூபம் 2' முதல் பாகத்தின் நீட்சி மட்டுமல்ல... முன்கதையும் கூட என்று தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள படம் ‘விஸ்வரூபம் 2’. இதன் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது. தமிழில் ஸ்ருதி ஹாசனும், இந்தியில் ஆமிர் கானும், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரும் ட்ரெய்லரை தங்களுடைய ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டனர்.

ஆனாலும், ஆழ்வார்பேட்டையில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை நடத்தினார் கமல்ஹாசன்.

அதில் பேசியவர், “எங்களுக்கு சரியென்று தோன்றுவதைத்தான் உங்களுக்குக் கொடுப்போம். அது ராஜ்கமலின் பழக்கம். ஆனால், இந்த முறை தாமதத்திற்குக் காரணம் ராஜ்கமல் அல்ல. அது உங்களுக்குத் தெரியும். ‘விஸ்வரூபம்’ படத்தின் தாமதத்துக்கே என்ன காரணம் என்பதும் உங்களுக்குத் தெரியும். கிட்டத்தட்ட அதே காரணங்கள் தான் தொடர்ந்தன. ‘தடைகளை வென்றே...’ என்று வரிகளை எழுதிக் கொடுத்த வைரமுத்துவுக்கு நன்றி.

வேறொரு பெயரில் உருவம் மாற்றி மாறுவேடத்தில் வந்த எதிர்ப்புதான் அது. இந்த முறை அப்படி வராது என நினைக்கிறேன். இந்த முறையும் எதிர்ப்புகள் வந்தால், அதை எதிர்கொள்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்திருக்கிறேன். அதனால், அரசியல்வாதியாக அதை எதிர்கொள்வதற்கு இப்போது தயாராக இருக்கிறேன்.

‘விஸ்வரூபம்’ படத்தைத் திரையிட்டுக் காட்டும்படி வற்புறுத்தப்பட்டேன். இப்போது அந்த வற்புறுத்தல் இருக்காது. படம் என்று வரும்போது எனக்குப் படம்தான். அரசியல் என்று வரும்போது, அதைத் தனியாகப் பார்த்துக் கொள்ளலாம். இரண்டையும் போட்டு அவர்கள் குழப்பிக் கொண்டால், அதற்கு நான் பொறுப்பு கிடையாது.

‘விஸ்வரூபம்’ படத்தின் தொடர்ச்சியும் நீட்சியும் மாத்திரம் மட்டுமல்ல ‘விஸ்வரூபம் 2’. அதன் முன்கதையும் இதில் இருக்கிறது. பல்லாயிரம் பிரிண்டுகளுடன் இந்தியா முழுவதும் இந்தப் படம் வெளிவர இருக்கிறது. உலகம் முழுவதும் என்பது கொஞ்சம் பகட்டாகத் தோன்றினாலும், அதுவும் உண்மைதான். ஒரு ஹாலிவுட் படம் எத்தனை பிரிண்டுகள் போடப்படுகிறதோ, கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையிலான பிரிண்டுகள் ‘விஸ்வரூபம் 2’ படத்துக்கும் போடப்பட்டுள்ளது என்பது பெரிய விஷயம்.

தமிழ்ப் படங்கள், உலகமெங்கும் பார்க்கப்படும் படங்களாக கூடிய விரைவில் மாறவேண்டும். அப்படிப் படங்கள் வந்து கொண்டிருக்கும்போது எங்கோ ஒரு மூலையில் சரித்திரத்தில் ராஜ்கமலின் பெயர் இடம்பெற்றால், நாங்கள் வாழ்ந்ததும் உழைத்ததும் வீண்போகவில்லை என்று நம்புவோம்.

என்னுடைய படங்களின் இசைக்கோர்ப்பு வழக்கமாக மகாபலிபுரத்தில் நடக்கும். ஆனால், இந்தப் படத்தின் இசைக்கோர்ப்பு டெல்லியில் நடைபெற்றது. தேசப்பற்றுப் பாடல் ஒன்றுக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் ஒரு ராகத்தைத் தேர்ந்தெடுத்தார். ஏன் அந்த ராகத்தை அவர் தேர்ந்தெடுத்தார் என்று தெரிந்தபோது கண்கலங்கி விட்டோம். ‘தேஷ்’ என்ற ராகம்தான் தேசப்பற்றுப் பாடலுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று அவர் விளக்கியபோதே எங்களுக்குச் சந்தோஷமாக இருந்தது. அந்த ராகத்தில்தான் அவர் எனக்காக முதல் ட்யூன் போட்டார். ரொம்ப சீக்கிரமாகவே அந்தப் பாடலின் இசைக்கோர்ப்பு முடிந்தது” என்றார் கமல்ஹாசன்.

'விஸ்வரூபம் 2' படம் ஆகஸ்ட் 10-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x