Published : 05 Jun 2018 01:32 PM
Last Updated : 05 Jun 2018 01:32 PM

“தடைகளைத் தாண்டி கர்நாடகத்தில் ‘காலா’ வெளியாகும்” - கமல்ஹாசன் நம்பிக்கை

‘தடைகளைத் தாண்டி கர்நாடகத்தில் ‘காலா’ வெளியாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமியை நேற்று சந்தித்தார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன். ஆனால், ‘காலா’ படத்துக்காகத்தான் குமாரசாமியைச் சந்தித்தார் என்றும் தகவல் பரவியது. பெங்களூரு சென்று திரும்பிய கமல்ஹாசனிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்...

ரஜினியின் ‘காலா’ படத்தைப் போலவே உங்கள் படத்துக்கும் பிரச்சினை வரும் என்பதால்தான் குமாரசாமியைச் சந்தித்தீர்களா?

கிடையாது. அங்கு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ‘படம் தொடர்பாகச் சந்திக்கவில்லை’ என்று சொன்னேன். அதாவது, சினிமா படங்களைக் காரணமாக வைத்து, அதில் சவாரி செய்யும் அரசியல் என்பதை எவ்வளவு வெறுக்கிறேன் என்பதற்கு நானே முன்னுதாரணம்.

என்னுடைய படங்களுக்கே அது நிகழ்ந்திருக்கிறது. அது நிகழக்கூடாது என்பதற்காக அரசுடன் வழக்குத் தொடுத்து நீதிபெற்று வந்தவன் நான். அதனால், நியாயமும் வியாபாரமும் தொடர்ந்து ஜெயித்துக் கொண்டே இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அது ரஜினியின் படத்துக்கும் நிகழும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

‘காலா’ படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாட்டாள் நாகராஜ் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

இது தவறான கருத்து. என் படத்துக்கும் அவர் தடை சொல்லியிருக்கிறார். நியாயமே வெல்லும் என்பதற்கு முன்னுதாரணமாக ‘விஸ்வரூபம்’ திகழ்ந்திருக்கிறது. ‘காலா’வும் அதேபோல் வெளியேவந்து, வெற்றி பெற்று, நல்ல வியாபாரம் ஆகும் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன்.

ஸ்வீடன், நார்வேயில் கூட ‘காலா’வுக்கு எதிர்ப்பு இருக்கிறது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

குழந்தையை அடித்தால் திருப்பி அடிக்காது என்ற கதை தான் இது. கலை தான் இங்கு குழந்தை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x