Published : 31 May 2018 04:37 PM
Last Updated : 31 May 2018 04:37 PM

“ஆதிக்க சாதியை அண்டிப் பிழைக்காமல் வாழ்வது அவர்களுக்கு அச்சுறுத்தலாகத் தெரிகிறது” - இயக்குநர் பா.இரஞ்சித்

‘ஆதிக்க சாதியை அண்டிப் பிழைக்காமல் வாழ்வது அவர்களுக்கு அச்சுறுத்தலாகத் தெரிகிறது’ என இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் இருபிரிவினருக்கு இடையே நடைபெற்ற மோதலில், 3 பேர் கொல்லப்பட்டனர். சிலர் காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்திற்கு நேற்று இரவு சென்ற இயக்குநர் பா.இரஞ்சித், அங்குள்ளவர்களிடம் என்ன நடந்தது என்பதைக் கேட்டறிந்தார். அத்துடன், மதுரை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 5 பேரையும் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இதுகுறித்துப் பேசிய இயக்குநர் பா.இரஞ்சித், “படுதுயரமான சம்பவம் இது. மிகப்பெரிய திட்டமிட்ட தாக்குதல் என்றுதான் மக்கள் சொல்கிறார்கள். வேளாண் விவசாயக் குடியாக, நிலபுலன்களுடன் ஆதிக்க சாதியை அண்டிப் பிழைக்காமல் வாழ்கிற ஒரு சமூகமாக வாழ்வதில் அவர்களுக்குப் பெரிய அச்சுறுத்தல் இருக்கிறது என நினைக்கிறேன். வெறும் முன்விரோதம் மட்டுமே இந்தச் சம்பவத்திற்கு காரணமாக இருப்பதில் வாய்ப்பில்லை. சாதி முரண் இந்த விஷயத்தில் பயங்கரமாக எதிர்வினையாற்றி இருக்கிறது. இந்த ஒரு நிகழ்வை வைத்தே தற்போதைய தமிழ்ச் சூழல் எப்படியிருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். ரொம்ப மோசமாகவும் கொடூரமாகவும் தாக்கப்பட்டிருக்கின்றனர்.

தாக்குதலுக்கு ஆளானவர்கள் நன்கு படித்திருக்கின்றனர். இதுமாதிரி படித்தவர்களைக் குறிவைத்து நடந்த மோசமான தாக்குதலாக இது இருக்கிறது. தாக்குதலுக்கு ஆளானவர்களின் பெற்றோர்களின் துயரம், அழுகை, கோபம் இதற்கெல்லாம் பதில் இருக்கிறதா என்றால், இந்தியா சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆனாலும் கூட, இந்த சூழல் தொடர்ந்து இப்படித்தான் இருக்கும் என்றால், அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. விடுதலை என்றால் என்ன? என்பதுதான் இப்போதைய கேள்வியாக இருக்கிறது.

ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம் வேண்டும் என்று போராடிய நாம், சுதந்திரம் பெற்று 72 வருடங்கள் ஆகியும் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் இல்லாமல் இருக்கிறோம். அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் இங்கு இருக்கிறது என்பது எவ்வளவு பெரிய துயரம் என்பதை இங்குள்ள எல்லாருமே புரிந்துகொள்ள வேண்டும். சாதி என்கிற வன்மம், மிக மோசமானது. இங்கிருக்கிற மக்கள் எல்லோருமே சாதியாகத்தான் இருக்கிறோம் என்ற உண்மையை என்று புரிந்து கொள்கிறோமோ, அன்றுதால் இந்தத் துயரத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

‘எங்களுக்கு அரசு தருகிற நிதி உதவி தேவையில்லை. நாங்கள் விவசாயம் செய்தே எங்களுக்குத் தேவையானதைப் பெற்றுக் கொள்கிறோம். எங்களுடைய பொருளாதாரத்தை, வளர்ச்சியை முடக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கமாக இருக்கிறது’ என்பதைத்தான் இவர்கள் தொடர்ந்து சொல்கிறார்கள். இந்தப் படுகொலைகளைச் செய்தவர்களை, இங்கிருக்கும் காவல்துறை தண்டிக்காது, எனவே சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதுதான் அவர்களுக்குத் தேவைப்படும் உடனடி நிவாரணமாக இருக்கிறது. ஏனென்றால், இங்கிருக்கும் காவல்துறையினரிடம் பலமுறை முறையிட்டும் கூட அவர்களால் பாதுகாப்புத் தர முடியவில்லை.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட சிலரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட வேண்டும், அவர்களைக் குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும், ஜாமீன் வழங்கக்கூடாது என்ற கோரிக்கைகளையும் அவர்கள் வைத்துள்ளனர். இது திட்டமிட்ட சாதி ரீதியான தாக்குதல் தான் என அவர்கள் உறுதியாகக் கூறுகின்றனர். இந்தச் சம்பவத்தில் இருக்கும் உண்மைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. காரணம், கை, காலை இழந்தபிறகு அவர்களால் எப்படி விவசாயம் செய்ய முடியும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x