Published : 13 Apr 2018 12:42 PM
Last Updated : 13 Apr 2018 12:42 PM

65-வது தேசிய திரைப்பட விருதுகள்: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு விருதுகள்!

65-வது தேசிய திரைப்பட விருதுகளில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

65-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. இதில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தமிழ்ப் படம் ‘காற்று வெளியிடை’. கார்த்தி, அதிதி ராவ் இருவரும் இந்தப் படத்தில் நாயகன் - நாயகியாக நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு, சிறந்த பாடல்களுக்கான தேசிய விருது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 5 பாடல்கள் இடம்பெற்ற இந்தப் படத்தில், 4 பாடல்களை வைரமுத்துவும், 1 பாடலை மதன் கார்க்கியும் எழுதியுள்ளனர்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான படம் ‘மாம்’. ரவி உத்யவார் இயக்கிய இந்தப் படத்தை, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். க்ரைம் த்ரில்லரான இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்துக்கு, சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ‘ரோஜா’, ‘மின்சார கனவு’, ‘லகான்’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ ஆகிய படங்களுக்காக தேசிய விருது வென்றவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x