Published : 15 May 2024 01:11 PM
Last Updated : 15 May 2024 01:11 PM

“தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள்” - ஜி.வி.பிரகாஷ் குமார்

ஜி.வி.பிரகாஷ் குமார்

சென்னை: “பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்வுக்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல. ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள்” என்று ஜி.வி.பிரகாஷ் ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பாடகர் சைந்தவி தம்பதியர் தங்களது திருமண பந்தத்தில் இருந்து பிரிய முடிவு செய்திருப்பதாக அண்மையில் அறிவித்தனர். அதனை பலரும் விமர்சித்தனர். இந்தச் சூழலில் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு: “புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது. பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்வுக்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல.

தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது “யாரோ ஒரு தனிநபரின்” வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா..? இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் உள்ள நண்பர்கள், உறவினர்கள் நன்கறிவார்கள் .

அனைவரிடமும் கலந்தாலோசித்து பின்புதான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம். எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன். ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள். தங்களின் பேரன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி” என அவர் தெரிவித்துள்ளார்.

சைந்தவி விளக்கம்: முன்னதாக, இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது பள்ளித் தோழி சைந்தவியை காதலித்து வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு இவர்கள் திருமணம் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவர்களுக்கு 4 வயதில் அன்வி என்ற மகள் இருக்கிறார். இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி ரெஹைனாவின் மகனான ஜி.வி.பிரகாஷ் இசை அமைப்பதோடு படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். சைந்தவி, பின்னணி பாடி வருகிறார்.

ஜி.வி.பிரகாஷுக்கும் சைந்தவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து கடந்த 6 மாதமாக பிரிந்து வாழ்வதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இருவரும் அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதுபற்றி சைந்தவி வெளியிட்ட பதிவில், “பல்வேறு யோசனைகளுக்குப் பிறகு 11 வருட திருமண வாழ்க்கையில் இருந்து இருவரும் பிரிய முடிவு செய்துள்ளோம். அதே நேரம் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பரஸ்பர மரியாதை அப்படியே நீடிக்கும். இது எங்கள் இருவருக்கும் சிறந்த முடிவாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த கடினமான காலகட்டத்தில் உங்களுடைய புரிதலும் ஆதரவும் எங்களுக்கு மிகவும் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார். ஜி.வி.பிரகாஷும் இதே அறிக்கையை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

— G.V.Prakash Kumar (@gvprakash) May 15, 2024

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x