Published : 01 Apr 2024 12:13 PM
Last Updated : 01 Apr 2024 12:13 PM

‘தக் லைஃப்’ படத்தில் ஜெயம் ரவிக்கு பதில் அருண் விஜய்?

சென்னை: தேதி பிரச்சினை காரணமாக மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகியதையடுத்து அவருக்குப் பதில் அருண் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மணிரத்னமும் கமல்ஹாசனும் ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி சில நாட்கள் நடந்தது. பின்னர் கமல்ஹாசன் சொந்த வேலை காரணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

தற்போது மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் ஈடுபட்டிருப்பதால் தேர்தல் முடிந்தபிறகு இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது. படப்பிடிப்பு தாமதமாவதால் தேதிகள் பிரச்சினை காரணமாக இப்படத்திலிருந்து முதலில் நடிகர் துல்கர் சல்மான் விலகினார். அவரைத் தொடர்ந்து ஜெயம் ரவியும் விலகினார்.

துல்கர் சல்மானுக்கு பதில் நடிகர் சிலம்பரசன் இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்க இருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படம் ஒன்றில் சிம்பு நடிக்கிறார். இப்படத்துடன் ‘தக் லைஃப்’ படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஜெயம் ரவி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அருண் விஜய் பாலாவின் ‘வணங்கான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ‘தக் லைஃப்’ படத்தில் கமல்ஹாசனுடன் அவர் நடிக்கலாம் என்று தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x