Published : 31 Mar 2024 04:10 AM
Last Updated : 31 Mar 2024 04:10 AM

நடிகர் டேனியல் பாலாஜி உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி

சென்னை: பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 48.

சென்னையை சேர்ந்த பாலாஜி, சென்னைத் திரைப்படக் கல்லூரியில் படித்தவர். 'சித்தி' தொடர் மூலம்நடிகராக அறிமுகமானார். இதில் டேனியல் என்ற கேரக்டரில் நடித்ததால், டேனியல் பாலாஜி ஆனார். தொடர்ந்து, 'ஏப்ரல் மாதத்தில்' படம் மூலம் சினிமாவுக்கு வந்த அவர், வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து தனித்துவமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார்.

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான ‘காக்க காக்க’ படத்தில் கவனிக்கப்பட்ட அவர், ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்து பிரபலமானார். பிறகு ‘பொல்லாதவன்’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘பைரவா’, ‘வடசென்னை’, ‘பிகில்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார்.

திருமணம் செய்துகொள்ளாத டேனியல் பாலாஜி, திருவான்மியூரில் வசித்து வந்தார். அவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை உடனடியாக கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் உயிரிழந்தார். இதை அறிந்த இயக்குநர்கள் வெற்றிமாறன், கவுதம் வாசுதேவ் மேனன், அமீர் உட்பட திரையுலகினர் மருத்துவமனைக்கே சென்று அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் புரசைவாக்கத்தில் உள்ள அவர் சொந்த வீட்டுக்கு உடல் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. டேனியல் பாலாஜி கண்தானம் செய்திருந்ததால், மருத்துவர்கள் அவர் கண்களைத் தானமாகப் பெற்றனர். திரையுலகினர், ரசிகர்கள் அவர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர் இறுதிச்சடங்கு நேற்று மாலை நடந்தது.

ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட டேனியல் பாலாஜி, ஆவடியில் அங்காளம்மன் கோயிலைக் கட்டியுள்ளார். டேனியல் பாலாஜி, நடிகர் முரளியின் சகோதரர் ஆவார். இருவரின் அம்மாவும் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் இரங்கல்: கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கலில், “தம்பி டேனியல் பாலாஜியின் திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது. இளவயது மரணங்களின் வேதனை பெரிது. பாலாஜியின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆறுதல். கண் தானம் செய்ததனால் மறைந்த பின்னும் அவர் வாழ்வார். ஒளியை கொடையளித்துச் சென்றிருக்கும் பாலாஜிக்கு என் அஞ்சலி.” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x