Published : 15 Mar 2024 12:28 PM
Last Updated : 15 Mar 2024 12:28 PM

படக்குழுவுக்கு தெரிவிக்காமல் விளம்பரம்: ஜியோ ஸ்டூடியோஸை சாடிய வசந்த் ரவி

சென்னை: ‘பொன் ஒன்று கண்டேன்’ படக்குழுவிடம் தெரிவிக்காமலேயே படம் நேரடியாக டிவி சேனலில் வெளியாகும் என்று அறிவிப்பு செய்த ஜியோ ஸ்டூடியோஸ் நிறுவனத்துக்கு நடிகர் வசந்த் ரவி கண்டனம் தெரிவித்துள்ளார்.

‘கண்டநாள் முதல்’, ‘கண்ணாமூச்சி ஏனடா’ போன்றப் படங்களை இயக்கிய பிரியா இயக்கத்தில் நடிகர்கள் அசோக்செல்வன், வசந்த் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘பொன் ஒன்று கண்டேன்’. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க அவரது ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் மற்றும் ஜியோ ஸ்டூடியோஸ் கூட்டு தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.

அண்மையில் இந்தப் படம் நேரடியாக தனியார் சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகும் என்ற அறிவிப்பை சம்பந்தப்பட்ட சேனல் வெளியிட்டது. இந்த நிலையில், இப்படத்தில் நடித்திருக்கும் வசந்த் ரவி, இந்த விவகாரம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “அதிர்ச்சியாக இருக்கிறது. இது உண்மைதானா? ஜியோ ஸ்டூடியோஸ் போன்ற இவ்வளவு பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இப்படி ஒரு அறிவிப்பா? ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் என்ற இந்த அறிவிப்பு அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் பிரியா என படம் தொடர்பான எங்கள் யாரின் அனுமதியும் இல்லாமல் வெளியாகி இருப்பது மிகவும் வேதனையாகவும், வருத்தமளிப்பதாகவும் இருக்கிறது.

இந்த படத்திற்காக கடுமையாக நாங்கள் உழைத்துள்ளோம். இந்த அறிவிப்பு குறித்து எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் எதுவுமே தெரியாது. இந்த படத்தை டிவியில் ஒளிபரப்புவோம் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டு எங்களுக்கு மரியாதை செலுத்தியதற்கு மிக்க நன்றி ஜியோ ஸ்டூடியோஸ்.

ஒரு நடிகரோ அல்லது கலைஞரோ தயாரிப்பு நிறுவனத்தின் வணிக ரீதியான முடிவுகளில் தலையிட முடியாது என்பது உண்மைதான். ஆனால், இதுபோன்ற அறிவிப்புகள் நேரடியாகவோ அல்லது படக்குழு மூலமாகவோ சொல்வதே சரியானது. இப்படி சமூகவலைதள பதிவுகள் மூலமாக எங்களுக்கும் சேர்த்து அறிவிப்பாக வெளியிடுவது சரியல்ல” என்று வசந்த் ரவி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x