Published : 20 Feb 2024 08:43 PM
Last Updated : 20 Feb 2024 08:43 PM

த்ரிஷா குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்புக் கோரிய சேலம் அரசியல் பிரமுகர்

சென்னை: த்ரிஷா குறித்து பேசியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், “ஒருவேளை உங்கள் மனம் புண்படும்படி இருந்திருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என சேலம் அரசியல் பிரமுகர் ஏ.வி.ராஜூ மன்னிப்புக் கோரியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “சமூக வலைதளங்களில் சிலர் என்னைப் பற்றி தவறான செய்தியைப் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். நான் அப்படி சொல்லவில்லை. சம்பந்தப்பட்ட நபர் சொன்னதை நான் சொன்னேன். திரைப்பட நடிகையையோ, மற்றவர்களையோ நான் குறிப்பிட்டுச் சொல்லவில்லை.

நான் பேசியது தவறாக சித்தரிக்கப்பட்டு பரப்பப்படுகிறது. இயக்குநர்கள் சேரன், ஆர்.கே.செல்வமணி, நடிகை த்ரிஷா ஆகியோருக்கு என் பணிவான வேண்டுகோள். ஒருவேளை உங்கள் மனம் புண்படும்படி இருந்திருந்தால் சமூக வலைதளங்களில் வழியாக நான் என்னுடைய மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏ.வி.ராஜூ

த்ரிஷா கண்டனம்: சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தவர் ஏ.வி.ராஜூ. இவர் எடப்பாடி பழனிசாமி மீதும், சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இதையடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய ஏ.வி.ராஜூ, கூவத்தூர் சம்பவம் குறித்து சில கருத்துகளை பகிர்ந்தார். அந்தச் சம்பவத்துடன் த்ரிஷாவை தொடர்புபடுத்தி அவர் பேசிய அவதூறு கருத்துகள் சர்ச்சை ஏற்படுத்தின. அவர் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து திரையுலகைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “கவனம் பெற எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மனிதர்களையும் கேவலமான மனிதர்களையும் திரும்பத் திரும்பப் பார்ப்பது அருவருப்பாக உள்ளது. இது தொடர்பாக உரிய, கடுமையான நடவடிக்கை உறுதியாக மேற்கொள்ளப்படும். இனிமேல் சட்டரீதியாகத்தான் எல்லாவற்றையும் சொல்லபோகிறேன்” என்று கொந்தளிப்புடன் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், ஏ.வி.ராஜூ மன்னிப்புக் கோரியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x