Last Updated : 14 Feb, 2018 05:47 PM

 

Published : 14 Feb 2018 05:47 PM
Last Updated : 14 Feb 2018 05:47 PM

காலா ஏப்ரல் 27 வெளியீடு ஏன்? - ஒரு அலசல்

ரஜினிகாந்த் நடிப்பில் 'காலா' திரைப்படம் ஏப்ரல் 27 அன்று வெளியாகும் என்ற செய்தி பலருக்கு ஆச்சரியத்தைத் தந்துள்ளது. ஏனென்றால் இந்த வருடத்தின் மிகப்பெரிய பட வெளியீட்டு தேதியாக அது பார்க்கப்பட்டது. அந்த தேதியில் தான் '2.0' வெளியாகும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது '2.0' இந்த வருடத்தின் பின்பாதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

'2.0' தயாரிப்பு தரப்பிலிருந்து படத்தின் வெளியீடு பற்றியோ, படம் தாமதமாவது பற்றியோ அதிகாரப்பூர்வமாக எந்த வித செய்தியும் வரவில்லை. கிராபிக்ஸ் பணி அதிகமாக இருப்பதால் தள்ளிப்போயிருப்பதாக சந்தையில் நம்பப்படுகிறது. சர்வதேச அளவில் 11 நிறுவனங்கள் '2.0' படத்தின் கிராபிக்ஸ் பணிகளை செய்து வருகின்றன.

படத்தின்  இசை வெளியீட்டு விழாவில், படத்தின் கிராபிக்ஸ் மேற்பார்வையாளர் ஸ்ரீனிவாச மோகன், தான் வேலை செய்ததில் அதிக சவாலான படம் 2.0 தான் என்று கூறியிருந்தது நினைவுக்கூரத்தக்கது.

ஏப்ரல் 27 'காலா' ஏன்?

'காலா' படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. ரஜினிகாந்த் இந்தப் படத்தில் மும்பையில் இருக்கும், ராபின்ஹுட் மாதிரியான ஒரு பாத்திரைப் படைப்பில், பெரிய தாதாவாக வருகிறார். நானா படேகர் அரசியல்வாதியாக நடிக்கிறார். ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்துக்கு தோதாக படத்தில் அரசியல் பேசப்படும் என்று கூறப்படுகிறது.

படத்தின் டப்பிங்கும் தொடங்கிவிட்டது. ரஜினிகாந்த் தனது டப்பிங்கை இந்த மாத இறுதிக்குள் முடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இல்லாததால் மார்ச் இறுதிக்குள் தணிக்கை பெற்று ஏப்ரல் 27 வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக ரஜினியின் 'கபாலி' திரைப்படத்துக்கான தணிக்கை தாமதமானதால், முதலில் சொல்லப்பட்ட தேதியில் வெளியிட முடியாமல் மாற்றப்பட்டது.

5 நாள் விடுமுறை

'2.0' க்கு பதிலாக 'காலா' என்றாலும், ஏப்ரல் 27 வெளியீடு தேதியை மாற்றாமல் இருப்பது புத்திசாலித்தனமான முடிவு என்று சந்தையில் நம்பப்படுகிறது. காரணம், செவ்வாய்க்கிழமை உழைப்பாளர் தினம் வருவதால், 27, 28, 29, 30, 1 என ஐந்து நாட்கள் சேர்ந்தார் போல விடுமுறையை வைத்து அதிக வசூல் பார்க்கலாம்.

கடந்த வருடம் உழைப்பாளர் தின சமயத்தில் வெளிவந்த 'பாகுபலி 2'க்கு மிகப் பெரிய வசூல் கிடைத்தது. வெளிய்நாடுகளில், கோடை தொடங்கும் சமயம் இது. படம் பார்க்க விரும்புபவர்களுக்கும் ஏற்ற நேரம். தமிழ்நாட்டில் 'காலா'வுக்கு போட்டியாக வேறெந்த படமும் வெளியாகப் போவதில்லை. திட்டமிடப்பட்டிருந்த 'மிஸ்டர். சந்திரமௌலி' படத்தின் வெளியீடு தேதியை மாற்றிக்கொள்வதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துவிட்டது.

ஏப்ரல் 27 வெளியாக திட்டமிடப்பட்டிருந்த 'விஸ்வரூபம் 2' படமும் பின்னொரு நாளில் தான் வெளியாகும். பிப்ரவரி 21 அன்று தனது அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் முனைப்பில் கமல்ஹாசன் இருக்கிறார். மேலும் ஜூன் மாதம் ஷங்கர் இயக்கத்தில், லைகா தயாரிப்பில் 'இந்தியன் 2' படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

தமிழ்நாட்டை தாண்டி ரஜினிகாந்துக்கு மிகப்பெரிய வியாபாரம் இருக்கும் மாநிலமாக பார்க்கப்படும்  ஆந்திராவில், 'காலா' தெலுங்கு டப்பிங் வெளியாகும் சமயம் தான் மகேஷ்பாபுவின் அரசியல் த்ரில்லர் படமான 'பரத் அனே நேனு' படமும் வெளியாகிறது. இதில் மகேஷ்பாபு முதல்வராக நடிக்கிறார். முன்னமே வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால் இந்த தேதியை மாற்ற முடியாது என்று தயாரிப்பாளர்கள் மறுத்துவிட்டனர்.

ஹாலிவுட் போட்டி

இந்நிலையில், டிஸ்னி, 'அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிடி வார்' என்ற தங்களின் பிரம்மாண்ட படைப்பை அமெரிக்காவில் வெளியிடும் முன்னரே ஏப்ரல் 27 அன்று இந்தியாவில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது.

'அவெஞ்சர்ஸ்' படத்தின் முதல் இரண்டு பாகங்களும் இந்தியாவில் வெற்றி பெற்றதால், டிஸ்னி மற்றும் மார்வெல் நிறுவனங்கள் இந்திய சந்தை லாபகரமானதாக மாறியுள்ளது. இந்தியாவில் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கும் 'அவெஞ்சர்ஸ்', தமிழ், தெலுங்கு, இந்தி என்று டப்பிங் செய்யப்படும் வெளியிடப்படவுள்ளதால் இதுவும் 'காலா'வுக்கு போட்டியாக அமையும்.

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்புக்குப் பிறகு வெளியாகும் முதல் படமான 'காலா' மீது பலரின் பார்வை விழுந்துள்ளது. ஏற்கெனவே படத்துக்கு எதிரான வேலைகளை ஆளுங்கட்சி தொடங்கிவிட்டதாகவும் செய்திகள் உலவுகின்றன. ஏற்கெனவே தமிழ்நாட்டில் இருக்கும் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு நடுவில், ரஜினியின் கட்சிக்கு எந்த மாதிரியான வரவேற்பு கிடைக்கப் போகிறது என்பதை 'காலா'வின் வசூலும் சொல்லும்.

© தி இந்து ஆங்கிலம்,
தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x