Published : 28 Jan 2024 09:23 AM
Last Updated : 28 Jan 2024 09:23 AM

‘விஜய்யை போட்டியாக நினைத்தால் அது எனக்கு கவுரவமாக இருக்காது’ - ரஜினி பேச்சு

நடிகர் ரஜினிகாந்த்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம், ‘லால் சலாம்’.இதில் விக்ராந்த், விஷ்ணு விஷால் நாயகர்களாக நடித்துள்ளனர். ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா தயாரித்துள்ள இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட்நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் நடைபெற்றது.

விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது: லால் என்றால் சிவப்பு என்றுஅர்த்தம். இந்தச் சிவப்பு நிறத்துக்குபல அடையாளங்கள் இருக்கின்றன. அதை கம்யூனிஸ்ட்கள் பயன்படுத்துவார்கள். வன்முறைக்கும் பயன்படுத்துவார்கள். புரட்சிக்கும் பயன்படுத்துவார்கள். ஐஸ்வர்யா புரட்சிக்காகத் தேர்ந்தெடுத்துள்ளார். ‘லால் சலாம்’ படத்தை ரஜினிகாந்தே தயாரிக்கலாம். அவர்கிட்ட இல்லாத பணமா? என்று நிறைய பேர் பேசினார்கள். 'பாபா' படத்துக்கு பிறகு நமக்குராசியில்லை என்று படம் எடுப்பதை நிறுத்திட்டேன். மத நல்லிணக்கம் பற்றி இந்தப் படம் பேசி இருக்கிறது. மனிதர்கள் சந்தோசமாக இருக்க வேண்டும் என்றுதான் மதம் உருவாகியது.

இப்போது நான்தான் பெருசு, நீதான் பெருசு என்று பேசிக் கொள்கிறார்கள். எந்த மதத்தில் உண்மை, நியாயம் இருக்கிறதோ அதுதான் சரியாக இருக்கும். தற்போது விஜய்க்கும் எனக்கும் போட்டி என கூறுவது மிகவும் வேதனைஅளிக்கிறது. நடிகர் விஜய், என் கண் முன் வளர்ந்தவர். அவரை சின்ன வயதிலிருந்தே பார்த்து வருகிறேன். ‘தர்மத்தின் தலைவன்’ படப்பிடிப்பின் போது விஜய்யின் தந்தை என்னிடம் வந்து, என் மகன் படித்து வருகிறான், அவனுக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாக உள்ளது. அவன் படித்துவிட்டு வந்தவுடன் நடிக்கலாம் என என்னைச் சொல்லும்படி சொன்னார்.

பிறகு விஜய் நடிப்புக்கு வந்து, தனதுதிறமையால், உழைப்பால் உயர்ந்துள்ளார். நன்றாக நடித்து வருகிறார். அவருக்கு என் வாழ்த்துகள். விஜய்-க்கும், எனக்கும் போட்டி என கூறுவது கவலை அளிக்கிறது. நடிகர் விஜய், எனக்கு போட்டி என நினைத்தால் அது எனக்கு மரியாதையாகவும், கவுரவமாகவும் இருக்காது. அதேபோல என்னை அவர் போட்டியாக நினைத்தால் அது அவருக்கும் மரியாதையாக இருக்காது. தயவு செய்து என்னுடைய மற்றும் அவருடைய ரசிகர்கள், 'காக்கா, கழுகு' கதையை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இது எனது அன்பான வேண்டுகோள். இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

முன்னதாக விழாவில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “என் அப்பா பற்றி சமீபத்தில் அடிக்கடி கேட்கும் வார்த்தை சங்கி. அவர் சங்கி இல்லை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் சங்கியாக இருந்தால் 'லால் சலாம்' படத்தில் இருந்திருக்க மாட்டார்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x