Published : 25 Feb 2018 06:46 PM
Last Updated : 25 Feb 2018 06:46 PM

மனிதாபிமானமுள்ளவர் ஸ்ரீதேவி: வீட்டு வாட்ச்மேன் நெகிழ்ச்சி

ஸ்ரீதேவி மனிதாபிமானத்துடன், எளிமையாக பழகக்கூடியவர் என்று அவரது வீட்டு முன்னாள் வாட்ச்மேன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

நடிகை ஸ்ரீதேவி தமிழ்த்திரையுலகம் தாண்டி இந்திய திரையுலகிலும் கால் பதித்து ஆதிக்கம் செலுத்தியவர். குழந்தை நட்சத்திரமாய் தமிழ்த்திரையுலகின் முன்னணி நடிகர் நடிகைகளுடன் நடித்த ஸ்ரீதேவி பின்னர் கதாநாயகியாக ரஜினி, கமல் உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்களுடன் நடித்து முன்னணி நாயகியாக வlலம் வந்தார்.

தென் இந்திய மொழிகள் கடந்து இந்திப்படத்திலும் கால் பதித்த ஸ்ரீதேவி தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். 1980 களில் முன்னணி நடிகையாக இருந்த காலத்தில் ஸ்ரீதேவி சென்னையில் வசித்தார்.

அப்போது அவரது வீட்டில் வாட்ச்மேன் வேலைக்கு ஆள் தேவை என்பதால் நெல்லையை சேர்ந்த மாலைராஜா என்பவரை ஸ்ரீதேவி வேலைக்கு அமர்த்தினார். மாலைராஜா இன்றும் ஸ்ரீதேவி வீட்டுக்கு எதிரில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் வாட்ச்மேனாக உள்ளார்.

அவர் ஸ்ரீதேவி மறைவு செய்திக்கேட்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் ஸ்ரீதேவிப்பற்றி அவரது நினைவை பதிவு செய்தார்.

“நெல்லையிலிருந்து வேலைக்கு வந்தேன். மிகப்பெரிய ஸ்டார் வீட்டில் வேலை எப்படி நடத்துவார்களோ என்ற தயக்கத்துடனே போய் நின்றேன்.

என்ன பெயர் என்ன என்று கேட்டார் மாலைராஜா மேடம் என்றேன். மாலை ராஜா எல்லாம் கிடையாது இனி நான் உங்களை ராஜா என்றுதான் கூப்பிடுவேன் சரியா என்று மிக எளிமையாக பெரிய கதாநாயகி என்ற எண்ணம் இல்லாமல் சாதாரணமாக பேசினார். அங்கு சேர்ந்திருந்த நேரத்தில் தான் எனக்கு திருமணமாகி இருந்தது. அவர் என்னை வேலைக்காரனாக பார்க்கவில்லை.

சக மனிதராக மதித்து நடத்துவார். எளிமையானவர் பந்தா அவருக்கு வராத ஒன்று. அவரது வீட்டில் வாட்ச்மேனாக இருந்த நேரத்தில் தான் எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது. அவர் எனது பிள்ளைகள் படிப்பு மற்ற விஷயங்களில் பெரிய அளவில் உதவி இருக்கிறார்.

சூட்டிங்குக்காக அவர் வெளியே போகும் போதெல்லாம் ராஜா உங்களை நம்பித்தான் வீட்டை விட்டு செல்கிறேன் என்று ஒவ்வொரு முறையும் சொல்லி விட்டுத்தான் செல்வார். பின்னர் அவரது வாழ்வில் திருமணம் நடந்தது. மகிழ்ச்சியாக இருந்தார். ஸ்ரீதேவி கணவர் போனிகபூரிடம் இந்தியில் தான் பேசுவேன். அவரும் எளிமையாக பழகுவார்.

நீ வேலையை விட்டு சென்றால் உனக்கு என்ன பிரச்சனை என்றாலும் என்னிடம் நேரடியாக பேசு என்று ஸ்ரீதேவி அடிக்கடி சொல்வார். குடும்ப விபரங்களை கேட்பார். சாதாரண நிலையிலிருந்து உயர்ந்த இடத்திற்கு வந்ததால் இயல்பாகவே அவரிடம் எளிமை இருந்தது. பின்னாளில் அவர் மும்பைக்கு சென்ற பின்னர் தொடர்பு குறைந்துவிட்டது.

நானும் எதிர்புறம் உள்ள பார்ட்மெண்டுக்கு வாடகைக்கு வந்துவிட்டேன். அவரது மரணச்செய்தியை காலையில் தான் அறிந்தேன். எனது சகோதரி ஒருவரை இழந்தது போல் உணர்கிறேன், ஸ்ரீதேவி என்றால் மனிதாபிமானத்துடன் இனிமையாக பழகும் அவரது முகம் தான் நினைவுக்கு வருகிறது. அவர் இல்லாததை நினைத்து பார்க்க முடியவில்லை.” என்று வருத்தத்துடன் மாலைராஜா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x