Published : 26 Jan 2024 10:06 AM
Last Updated : 26 Jan 2024 10:06 AM

“இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும்”- பவதாரிணி மறைவுக்கு கமல் இரங்கல்

சென்னை: பிரபல பின்னணி பாடகி பவதாரிணி மறைவுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 47. கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இதற்கான ஆயுர்வேத சிகிச்சைக்காக அவர் இலங்கை சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது உடல் இன்று மாலை சென்னை கொண்டுவரப்படும் என தெரிகிறது.

பவதாரிணி மறைவுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தள பதிவில் அவர் கூறியுள்ளதாவது: “மனம் பதைக்கிறது. அருமைச் சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக்கொள்கிறேன். பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று. இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும். பவதாரிணியின் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கல்” இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

— Kamal Haasan (@ikamalhaasan) January 26, 2024

மறைந்த பவதாரிணி, கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான ‘பாரதி’ படத்தில் பாடிய ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ என்ற பாடலுக்காக தேசிய விருதை பெற்றார். தொடர்ந்து, ‘தேடினேன் வந்தது’, ‘காதலுக்கு மரியாதை’, ‘அழகி’, ‘பிரண்ட்ஸ்’ ‘மை பிரண்ட்' , ‘பிர் மிலேங்கே’ ஆகிய இந்திப் படங்களுக்கும் தமிழில் ‘இலக்கணம்’, ‘அமிர்தம்’ உட்பட சில படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இவர் விளம்பர நிர்வாகி சபரிராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x