Published : 25 Jan 2024 08:56 PM
Last Updated : 25 Jan 2024 08:56 PM

இளையராஜா மகளும், பாடகருமான பவதாரிணி காலமானார்

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகருமான பவதாரிணி உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 47.

கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான ‘பாரதி’ படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ பாடலுக்காக பவதாரிணிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. 1984-ல் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ மலையாள படத்தில் இடம்பெற்ற ‘திதிதே தாளம்’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார். தொடர்ந்து, ‘ராசய்யா’, ‘அலெக்சாண்டர்’, ‘தேடினேன் வந்தது’, ‘காதலுக்கு மரியாதை’, ‘அழகி’, ‘பிரண்ட்ஸ்’, ‘தாமிரபரணி’, ‘உளியின் ஓசை’, ‘கோவா’, ‘மங்காத்தா’, ‘அனேகன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் பாடியுள்ளார்.

தவிர, கடந்த 2002-ம் ஆண்டு ரேவதி இயக்கத்தில் வெளியான ‘மித்ர் மை பிரண்ட்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். தொடர்ந்து, ‘பிர் மிலேங்கே’ (இந்தி), ‘அமிர்தம்’, ‘இலக்கணம்’, ‘மாயநதி’ படங்களுக்கு இசையமைத்துள்ளார். பவதாரணி கடந்த 5 மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்ற அவர், அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், வியாழக்கிழமை மாலை 5.20 மணி அளவில் இலங்கையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது உடல் வெள்ளிக்கிழமை மாலை சென்னை கொண்டுவரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்: "பிரபல பின்னணிப் பாடகியும் இசைஞானியின் அன்பு மகளுமான பவதாரிணியின் அகால மரணத்தால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இசைமேதைகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த பவதாரிணி , தேனினும் இனிய தனது குரல்வளத்தால் இளம் வயதிலேயே ரசிகர்களின் நெஞ்சில் தனியிடம் பிடித்தவர் ஆவார். கேட்டதும் அடையாளம் கண்டுகொண்டு பரவசமடையச் செய்யும் மிகவும் தனித்துவமான குரல் அவருடையது. பாரதி திரைப்படத்தில் தனது தந்தையின் இசையமைப்பில் பாடிய 'மயில் போல பொண்ணு ஒன்னு' பாடலுக்காக இளம் வயதிலேயே தேசிய விருதும் பெற்றவர். இசையமைப்பாளராகவும் பல படங்களுக்குப் பணிபுரிந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து இசையுலகில் எத்தனையோ சாதனைகளைச் செய்திருக்க வேண்டிய பவதாரிணியின் திடீர் மறைவு இசையுலகில் ஈடுசெய்தற்கரிய இழப்பு. அவர் விட்டுச் செல்லும் இடம் அப்படியே இருக்கும்.தனது பாசமகளை இழந்து துடிக்கும் இசைஞானிக்கும், பவதாரணியின் சகோதரர்கள் யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இயக்குநர் பாரதிராஜா இரங்கல்: “என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன். மகள் பவதாரிணியின் மறைவு, எங்கள் குடும்பத்தினருக்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும்” என தெரிவித்துள்ளார்.

ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்: “இசையமைப்பாளர் இளையராஜா மகளும்,பிரபல பின்னணி பாடகியுமான பவதாரணி உடல் நலக்குறைவால் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன். தனது இனிமையான குரல் வளத்தால் பல இசை ரசிகர்களை கவர்ந்து தேசிய விருது உட்பட பல விருதுகளை வென்று இசை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அவரின் இழப்பு இசைத்துறைக்கு பேரிழப்பாகும்.அவரை இழந்து வாடும் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிப்பதோடு சகோதரி பவதாரணியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இரங்கல்: “இசைஞானி இளையராஜா மகளும், திரைப்பட பின்னணி பாடகியுமான, பவதாரணியின் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் இரங்கல்: “இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல்: “சிறந்த பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளரும், இசைஞானி இளையராஜா அவர்களது புதல்வியுமான பவதாரணி, உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி, மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. தனது தனிச் சிறப்பான குரலால், இதயத்தை நெகிழச் செய்யும் பல பாடல்களைப் பாடியவர் பவதாரணி. இளம் வயதிலேயே தேசிய விருது வென்ற பவதாரணி அவர்கள் இசையுலகில் பல சாதனைகள் படைப்பார் என்று அனைவரும் விரும்பியிருந்த போது, அவரது எதிர்பாராத மறைவு சற்றும் ஏற்க முடியாததாக இருக்கிறது. பவதாரணி அவர்களைப் பிரிந்து வாடும் இசைஞானி இளையராஜா குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்தக் கடினமான நேரத்தில் அவர்களுக்கு இறைவன் துணையிருக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பா.ரஞ்சித்: “சகோதரி, இசைக்கலைஞர் பவதாரணி அவர்களின் இறப்பு செய்தி, பெரும் அதிர்ச்சியையும் மனவேதனையும் அளிக்கிறது! அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்” என பா.ரஞ்சித் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: “இசைஞானி இளையராஜா அவர்களின் அன்பு மகள் பின்னணி பாடகி சகோதரி பவதாரணி, உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன். தனித்தன்மையுடன் கூடிய குரலால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்த அவரது மரணம், தமிழ் இசை உலகிற்கு பேரிழப்பாகும்.

அவருடைய மரணத்துக்கு என் ஆழ்ந்த இரங்கல். பவதாரணியை இழந்து வாடும் இசைஞானி இளையராஜா சார், சகோதரர்கள் கார்த்திக்ராஜா, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட அவருடைய குடும்பத்தார் - நண்பர்களுக்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்: “பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ‘இசைஞானி’ இளையராஜா, எம்.பி. அவர்களின் மகளும், பிரபல பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரணி ராஜா அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினை இளம் வயதிலேயே பெற்ற சிறப்புக்குரியவர் பவதாரணி அவர்கள். வித்தியாசமான குரல் வளத்தைக் கொண்டுள்ள பவதாரணி அவர்கள், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல பாடல்களை பாடி ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட பெருமைக்குரியவர். இவரது இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

பவதாரணியை இழந்து வாடும் அவரது தந்தை இளையராஜா அவர்களுக்கும், அவரது கணவர், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன்: மனம் பதைக்கிறது. அருமைச் சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக்கொள்கிறேன். பவதாரிணியின் மறைவு பொறுத்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாத ஒன்று. இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும். பவதாரிணியின் குடும்பத்தாருக்கு என் நெஞ்சார்ந்த இரங்கல்.

வடிவேலு: பவதாரிணி சாதாரண குழந்தை அல்ல. அது ஒரு தெய்வக் குழந்தை. அந்தக் குழந்தையோட குரல் குயில் போல இருக்கும். அவருடைய மறைவு செய்தி கேட்டு உலகத் தமிழர்கள் அனைவரும் இன்னைக்கு நொறுங்கிப்போய் இருக்கிறார்கள். தைப்பூச நாளில் தங்கை பவதாரிணி உயிரிழந்த நிலையில், அந்த முருகப்பெருமானுடைய காலடியில் போய் தான் அந்த தங்க மகள் இளைப்பாருவார்கள். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும். குடும்பத்தாருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏ.ஆர்.ரஹ்மான்: மயிலிறகாய்த் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது. காற்றெல்லாம் தீரா அதிர்வெழுப்பிக் ககனவெளியெங்கும் கதிரொளியாய் விரிகிறது. இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா இந்த நேரத்தில் உங்களுடன் துணை நிற்கிறேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x