Published : 20 Jan 2024 03:14 PM
Last Updated : 20 Jan 2024 03:14 PM

“விஜயகாந்த் குணாதிசயங்களை பற்றி கேட்கவே மலைப்பாக இருக்கிறது” - நடிகர் கார்த்தி @ நினைவேந்தல் நிகழ்வு

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் நினைவேந்தல் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் கார்த்தி, “கேப்டனை சந்திக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் எவ்வளவோ பேரை அவர் வளர்த்து விட்டுள்ளார். அவருடன் பணியாற்றியவர்கள் அவருடைய குணாதிசயங்களை பற்றி சொல்ல சொல்ல கேட்கவே மலைப்பாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் நினைவேந்தல் கூட்டம் நேற்று சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் மன்சூர் அலிகான், “விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது நான் செயற்குழு உறுப்பினராக அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். அந்த சமயத்தில் என்னிடம் சங்கத்தின் பத்திரத்தை எல்லாம் காண்பித்துள்ளார். இப்போது நடிகர் சங்க கட்டடத்தை கடன் வாங்கி கட்டுகிறார்களா என்று தெரியாது. ஆனால் விஜயகாந்த் நடித்த ஒரு படத்தில் இடம் பெற்றது போல அனைத்து நடிகர்களையும் அழைத்து விருந்தளித்து உபசரித்து மொய் விருந்து போன்று வைத்து பணம் வசூலிப்போம்.

அனைவரும் தங்களால் இயன்ற தொகையை அளிக்கட்டும். கேப்டன் இருந்தபோது நடிகர் சங்கம் ஒரு ராணுவ பலத்துடன் இருந்தது. ஆட்சியாளர்கள் கூட பயந்தனர். இல்லாவிட்டால் ஒரு ராமேஸ்வரம் போராட்டத்தை நடத்திக் காட்டி இருக்க முடியுமா? நெய்வேலி போராட்டத்தை மறக்க முடியுமா? விஷால், நாசர் உங்களுக்கு சக்தி இருக்கிறது. இனி நடிகர் சங்கம் ஒரு ராணுவ பலத்துடன் தமிழ்நாட்டில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். யாருக்கும் கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. கேப்டன் வளாகத்தில் வருடம் தோறும் கேப்டன் பெயரில் பொங்கல் விழா நடத்த வேண்டும்” என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து, தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் நடிகர் கார்த்தி பேசும்போது, “கேப்டனை சந்திக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் எவ்வளவோ பேரை அவர் வளர்த்து விட்டுள்ளார். அவருடன் பணியாற்றியவர்கள் அவருடைய குணாதிசயங்களை பற்றி சொல்ல சொல்ல கேட்கவே மலைப்பாக இருக்கிறது. வரலாற்றில் தான் இது போன்ற மக்கள் இருப்பார்கள் என படித்துள்ளோம். அப்படி உண்மையாகவே நம்முடன் வாழ்ந்த ஒருத்தர் கேப்டன் என நினைக்கும் போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது. அவர் இருந்த தமிழ் சினிமாவில் நாமும் இருக்கிறோம் என்பதே ரொம்ப பெருமையாக இருக்கிறது.

நடிகர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் எப்படி அன்பாக இருக்க வேண்டும் என அவர் வாழ்ந்து காட்டியது போல் இனிமேல் நாங்கள் வாழும் வாழ்க்கைக்கு ஒரு மிகப்பெரிய முன்னுதாரணமாக எடுத்துக்கொள்கிறேன். ஒவ்வொரு விஷயம் செய்யும் போதும் அவரை மனதில் நினைத்துக் கொண்டு செய்ய வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

ஒரு மனிதன் முற்றிலும் அன்புடன் எந்தவித பாகுபாடும் பார்க்காமல் பணத்தின் மீது பெரிய ஆசை இல்லாமல் நல்லவனாகவே இருந்தால் இந்த சமுதாயம் மதிக்குமா என்றால் மதிக்காது என்று தான் கேள்விப்பட்டு உள்ளோம். ஆனால் அப்படி ஒருத்தர் இருந்தால் மக்கள் எப்படி கொண்டாடுவார்கள் என்பதை அவர் வாழ்ந்து காட்டி விட்டு சென்றுள்ளார்.

மறுபடியும் மனிதன் மீதும் சமுதாயத்தின் மீதும் நம்பிக்கை வருவது இதனால் தான். இப்படி வாழ்ந்தால் இப்படி மரியாதை கிடைக்கும் என எடுத்துக்காட்டி சென்றுள்ளார். கேப்டனின் நிர்வாக திறமை பற்றி நிறைய பேர் பேசி கேள்விப்பட்டு கொண்டே இருக்கிறோம். நாங்கள் எல்லாம் புதிதாக அனுபவம் இல்லாமல் வந்து ஒவ்வொரு நாளும் புதிதாக கற்றுக் கொள்கிறோம். ஒவ்வொரு நிகழ்ச்சி நடத்தும் போதும் அதில் வருபவர்களை கவனிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யும்போது கேப்டனுடன் பயணித்தவர்கள் அவருடைய செயல்பாடுகள் குறித்து கூறும்போது அதை முன்னுதாரணமாக வைத்து இன்னும் நன்றாக செயல்பட வேண்டும் என அடுத்தடுத்து முயற்சி எடுத்து வருகிறோம்.

எங்களுக்கெல்லாம் ஒரு பென்ச் மார்க்கை உருவாக்கி வைத்து விட்டார் கேப்டன். அதை நாங்கள் சந்திப்பதற்கு இன்னும் நிறைய உழைக்க வேண்டும் என்பது மட்டும் எங்களுக்கு தெரிகிறது. எல்லோரும் ஒன்று சேர்ந்து அன்பாக பேசுவதே அவருடைய ஆசிர்வாதம் என்று நினைக்கிறேன். அவருடைய ஆசிர்வாதத்தால் நடிகர் சங்க கட்டடம் விரைவில் முடிய வேண்டும் என விரும்புகிறேன். அவரது நினைவுகளை இங்கே அமர்ந்து கொண்டாடிக் கொண்டிருப்பதை மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.

அவர் இறந்த சமயத்தில் நடிகர் சங்க நிர்வாகிகள் அனைவருமே கலந்துகொள்ள முடியவில்லை என்பதில் மிகப்பெரிய வருத்தம். அந்த வருத்தத்தை இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் ஆற்றிக் கொள்கிறோம். எல்லோரும் சொன்னது போல கேப்டனின் இரண்டு பிள்ளைகளும் மிகப்பெரிய இடத்திற்கு வர வேண்டுமென ஆசைப்படுகிறோம். மக்களுடைய ஆசிர்வாதம் உங்கள் இருவருக்குமே இருக்கும்” என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x