Published : 06 Jan 2024 10:49 PM
Last Updated : 06 Jan 2024 10:49 PM

“ஒருமுறை இரட்டை இலைக்கு வாக்களித்த போது...” - ரஜினிகாந்த் @ ‘கலைஞர் 100’ விழா

சென்னை: ஒரு தேர்தலின் போது தான் இரட்டை இலைக்கு வாக்களித்தது தெரிந்து முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறிய வார்த்தைகளை நடிகர் ரஜினிகாந்த் ‘கலைஞர் 100’ விழாவில் சுவாரஸ்யமாக பகிர்ந்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா ‘கலைஞர் 100’ என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள், ரஜினி, கமல், வடிவேலு உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: “கலைஞர் கருணாநிதி குறித்து பேச ஆரம்பித்தால் எங்கு ஆரம்பிப்பது எங்கு முடிப்பது என்று எனக்கு தெரியாது. அந்த அளவுக்கு அவரால் ஈர்க்கப்பட்டவன் நான். சிவாஜியை ஒரே படத்தில் ஸ்டார் ஆக்கியவர். சாதாரண நடிகராக இருந்த எம்ஜிஆரை பெரிய வெற்றிப் படங்களை கொடுக்க வைத்தவர். அவர் அரசியலுக்கு செல்லாமல் சினிமாவிலேயே இருந்திருந்தால் எத்தனையோ சிவாஜி, எம்ஜிஆரை உருவாக்கி இருப்பார். ஒருவருக்கு எழுத்தாற்றல் இருந்தால், பேச்சாற்றல் இருக்காது. ஆனால் கருணாநிதிக்கு இந்த இரண்டுமே இருந்தது.

தொண்டர்களுக்கு கருணாநிதி எழுதிய கடிதங்களை படித்தால் கண்களில் கண்ணீர் வரும். சிலவற்றை படித்தால் நெருப்பு வரும். சிலபேர் தன்னுடைய அறிவை காட்டுவதற்காக பேசுவார்கள். மற்றவர்களுக்கு புரிகிறதா என்று யோசிக்கமாட்டார்கள். ஆனால் கருணாநிதி அறிஞர் சபையில் அறிஞராகவும், கவிஞர் சபையில் கவிஞராகவும் பாமரனுக்கு பாமரனாகவும் பேசுவார்.

என் படத்திற்கு கருணாநிதி வசனம் எழுதுகிறார் என்று சொன்னதும், அந்த படத்தில் நடிக்கவில்லை என்று அவரிடம் சொல்வதற்காக சென்றேன். ஏன் என்றால் எனக்கு அப்போது தமிழ் பெரிதாக வராது. நான் இதை அவரிடம் கூறியபோது, ‘சிவாஜி நடித்தால் சிவாஜிக்கு ஏற்ற மாதிரி வசனம் எழுதுவேன். யார் நடிக்கிறார்களோ, அவர்களுக்கு ஏற்ற மாதிரி வசனம் எழுதுவேன்’ என்று பதிலளித்தார்.

வழக்கமாக கருணாநிதி ஒரு நடிகருடன் சேர்ந்து படம் பார்ப்பார். அது தேர்தல் நேரம். அந்த நடிகர் ஓட்டுப் போட்டு விட்டு வெளியே வந்தபோது பத்திரிகையாளர்கள் அவரிடம் யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என்று கேட்டனர். ‘இரட்டை இலைக்கு’ என்று அந்த நடிகர் சொன்னது அப்போது ட்ரெண்டாகி விட்டது. அன்று மாலை கருணாநிதியுடன் சேர்ந்து படம் பார்க்க வேண்டும். ஆனால் எப்படி செல்வது என்று தெரியாமல் குளிர் காய்ச்சல் என்று சொல்லிவிட்டார் அந்த நடிகர். ஆனால் அவர் வரவேண்டும் என்று கருணாநிதி கூறிவிட்டார். தியேட்டருக்கு சென்றபோது, ‘வாங்க, காய்ச்சல்ன்னு சொன்னீங்களாமே, ‘சூரியன்’ பக்கத்துல உட்காருங்க’ என்று சொன்னார். அந்த நடிகர் வேறு யாருமல்ல. நான் தான்.

‘உங்களுக்கு ஆண்டவனை பிடிக்காது. ஆனால் ஆண்டவனுக்கு உங்களை பிடிக்கும் என்று அவரிடமே சொன்னேன். முதல்வர் ஸ்டாலின் தன் அப்பா பெயரை காப்பாற்ற வேண்டும். காப்பாற்றுவார் என்று நம்பிக்கை உள்ளது. அவர் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும்.” இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x