Published : 30 Dec 2023 05:49 AM
Last Updated : 30 Dec 2023 05:49 AM

“இன்னும் வேணும்னா கேளுங்க என்றார் கேப்டன்“ - விஜயகாந்தின் காஸ்ட்யூம் டிசைனர் உருக்கம்

காஸ்ட்யூம் டிசைனர் ராஜேந்திரனுடன் விஜயகாந்த்.

சென்னை: நடிகர் விஜயகாந்தின் காஸ்ட்யூம் டிசைனர் எஸ்.ராஜேந்திரன். பல ஆண்டுகளாக அவரது பர்சனல் காஸ்ட்யூமராகப் பணியாற்றிய அவர், விஜயகாந்தின் மறைவால் அதிர்ச்சியில் இருக்கிறார். அவர் கூறியதாவது:

விஜயகாந்த் நடித்த சில படங்களுக்கு கம்பெனி காஸ்ட்யூமராகப் பணியாற்றினேன். வடிவுக்கரசி தயாரித்த ‘அன்னை என் தெய்வம்’ படத்தில் கேப்டன்தான் ஹீரோ. அந்தப் படத்தில் இருந்து, அவரது கடைசிகாலம் வரை தனிப்பட்ட காஸ்ட்யூம் டிசைனர் நான்தான்.

டி-சர்ட் மட்டும்தான் ரெடிமேடாக வாங்குவார். கோட்- சூட்டில் இருந்து மற்ற அனைத்து உடைகளும் நான்தான் தைத்துக் கொடுப்பேன். அவரிடம் பணியாற்ற மிகுந்த விருப்பமாக இருக்கும். மிகவும் எளிமையான மனிதர். படப்பிடிப்பில் சிலமுறை என்னிடம் கோபப்பட்டிருக்கிறார். அதுவும் செல்ல கோபம்தான்.

வில்லனுக்கும் முக்கியம்... புலன் விசாரணை படத்துக்காக விஜயகாந்துக்கு ‘ஸ்ட்ரெச் மெட்டிரீயலில்’ துணி எடுத்து தைத்தேன். அந்தப் படத்தில் சரத்குமார் வில்லன் என்பதால் சாதாரண மெட்டீரியலில் தைத்துஅனுப்பிவிட்டேன். சாரதா ஸ்டூடியோவில் ஷூட்டிங். இரவு 11 மணிக்கு எனக்கு போன் வந்தது. “சரத்குமாருக்கு ஏன் சாதாரண மெட்டிரீயல் துணி எடுத்து பேன்ட் தச்சீங்க?” என்று கேட்டார் கேப்டன். நான், “வில்லன்தானே?” என்று சொன்னேன். “வில்லனுக்குத்தான் அந்த மெட்டீரியல் வேணும். அப்படி இருந்தா தானே காலைத் தூக்கி ஃபைட் பண்ண முடியும்? உடனே அதை ரெடி பண்ணுங்க” என்றார்.

காலையில் வேறு உடைகள் தைத்துக் கொடுத்த பின்னரே படப்பிடிப்பு நடந்தது. தன்னைப் போலவே மற்றவர்களையும் சமமாக நடத்த வேண்டும் என்று நினைப்பவர் விஜயகாந்த்.

செல்லமாக கோபப்பட்டார்: இதேபோல, ‘தாயகம்’ படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தது. பாடல் காட்சிக்காக அனைவரின் உடைகளையும் அனுப்பிவிட்டேன். திடீரென்று சென்னையில் மழை. மின் இணைப்புஇல்லை. ஹீரோயினுக்கான ஒரே ஒரு உடையை மட்டும் அனுப்ப முடியவில்லை. அப்போதும் செல்லமாகக் கோபப்பட்டார். அதுதவிர, எப்போதும்அன்பாகவே நடந்துகொள்வார்.

ஒவ்வொரு படம் முடிந்ததும் படத்தில் பணியாற்றிவர்களுக்குப் புது உடைகள் வாங்கிக் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார். நான் வீடு கட்டப் போகிறேன் என்று சொன்னதும் ஒரு தொகையை கையில் கொடுத்து, ‘இன்னும் வேணும்னாகேளுங்க’ என்றார்.

என் மகனுக்கும் மகளுக்கும் அவர் தான் திருமணம் நடத்தி வைத்தார். அந்த நல்ல மனசுக்காரர் மறைவால் என் வீட்டிலும் துக்கம் கடைப்பிடிக்கிறோம்.

இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x