Published : 20 Dec 2023 05:55 AM
Last Updated : 20 Dec 2023 05:55 AM

தயாளன்: 2-ம் உலகப்போரில் பங்கேற்ற இயக்குநரின் படம்

மதுரையைச் சேர்ந்த ஆண்டனி மித்ராதாஸ், தமிழ், மலையாளம், சிங்களத்தில் சில திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். இவர், ‘தயாளன்’ என்ற தனது முதல் படத்தை இயக்கிய நேரத்தில், இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. நாட்டுப் பற்று மிகுந்த மித்ரா தாஸ், படத்தை முடித்துவிட்டு ராணுவத்தில் சேர்ந்துவிட்டார். ஜபல்பூர், டாக்கா, சிட்டகாங், சிங்கப்பூரில் சுமார் 4 வருடங்கள் பணியாற்றிவிட்டு, போர் முடிந்த பின் மீண்டும் வந்து திரைப்படங்களை இயக்கினார்.

2-ம் உலகப்போரில் பங்கேற்ற இயக்குநரின் படம்தயாளன்சிறு வயதிலேயே சினிமா மீதான ஆர்வம் காரணமாகக் கொல்கத்தாவில் உள்ள பிலிம் இன்ஸ்டிடியூட் ஒன்றில் சேர்ந்தார் மித்ரா தாஸ். அங்கு கவுரவ விரிவுரையாளராக வந்த எல்லீஸ் ஆர்.டங்கன், மித்ரா தாஸின் திறமையைக் கண்டு, மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரத்திடம் அறிமுகம் செய்ய, ‘தயாளன்’ பட வாய்ப்பு கிடைத்தது, மித்ரா தாஸூக்கு.

இதில் அந்தக் காலகட்டத்தில் முன்னணியில் இருந்த பி.யு.சின்னப்பா ஹீரோவாக நடித்தார். டி.ஆர்.மகாலிங்கம், காளி என்.ரத்தினம், கே.வி.ஜெயகவுரி, சி.டி.ராஜகாந்தம், கே.கே.பெருமாள், டி.எம்.ராமசாமி, உட்பட பலர் நடித்தனர்.

படத்தை, மதுரை காசி மகாராஜா பிக்சர் சர்க்யூட்டுடன் இணைந்து தயாரித்தது மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம். கதையை, எட்டையபுரம் ‘இளையராஜா’ காசி விஸ்வநாத பாண்டியன் எழுதினார். வசனத்தை குப்புசாமி கவியும் பாடல்களை மகாராஜா வாத்தியாரும் எழுதினர். அரச குடும்பத்தில் நடக்கும் பதவி ஆசை மற்றும் சதி காரணமாகப் பெற்ற மகனுக்கே மன்னர் மரண தண்டனை அளிக்க, அதிலிருந்து தப்பிக்கும் மகன், சதியை முறியடித்து நாட்டைக் காப்பாற்றுவது கதை.

தயாளனாக நடித்த பி.யு.சின்னப்பா, வாள் மற்றும் சிலம்ப சண்டைக்காட்சிகள் மற்றும் ஸ்டைலான வசன உச்சரிப்புகளால் கவனம் ஈர்த்தார். அந்தக் காலத்தில் தமிழ், தெலுங்கில் புகழ்பெற்ற நடனக் கலைஞரும் நடன இயக்குநருமான குல்கர்னி தனது குழுவினருடன் நடனத்தை அமைத்திருந்தார். 20-க்கும் அதிகமானப் பாடல்களைக் கொண்ட இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் பெயர், படத்தில் குறிப்பிடப்படவில்லை. டியூன்களை இந்தி மற்றும் பெங்காலி படங்களின் இன்ஸ்பிரேஷனில் உருவாக்கி இருந்தனர்.

கே.வி.ஜெயகவுரி பாடிய, ‘அன்பே உமதின்பம் தனையே அடியாள் அடைவேனோ’, பி.யு. சின்னப்பா, ஜெயகவுரி பாடிய, ‘வனிதாமணியே வாஞ்சையின் கனிவே’,‘கோமளமானே குணபூஷணமே’ உட்பட பல பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. மகாபாரதத்தில் வரும் பாஞ்சாலி துகிலுரி படலத்தை வில்லுப்பாட்டுப் பாணியில் காளி என் ரத்தினமும் வி.எம்.ஏழுமலையும் பாடிய பாடலும் அப்போது ஹிட்டானது.

அந்தக் காலகட்டத்தில் பாடல் பாடி நடிக்கும் நடிகர்கள் கிராமஃபோன் நிறுவனங்களின் ஒப்பந்தத்தில் இருப்பார்கள். அவர்கள் பாடல் பாடிய படம் இவர்கள் ஒப்பந்தத்தில் இல்லாத வேறு கிராமஃபோன் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டால், படத்தில், சம்பந்தப்பட்ட நடிகர்களும் இசைத் தட்டில் வேறு பாடகர்களும் பாடுவது வழக்கம். ‘தயாளன்’ படத்தில் சின்னப்பா பாடிய பாடல்களை, இசைத்தட்டில் கே.நடராஜன் பாடியிருந்தார். 1941-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x