Published : 10 Dec 2023 06:12 AM
Last Updated : 10 Dec 2023 06:12 AM

திரை விமர்சனம்: கான்ஜுரிங் கண்ணப்பன்

இன்டர்வியூ செல்லும் அவசரத்தில் இருக்கும் கண்ணப்பன் (சதீஷ்), வீட்டில் பல வருடங்களாகப் பூட்டப்பட்டிருக்கும் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கிறார். அப்போது அவருக்குஇறகுகளால் பின்னப்பட்ட ‘ட்ரீம் கேட்சர்’(dream catcher) கிடைக்கிறது. அது பில்லிசூனியம் வைத்து கட்டப்பட்ட ஒன்று என்பது அவருக்குத் தெரியாது. அதில் இருக்கும்இறகைக் கண்ணப்பன் தெரியாமல் பிய்த்துவிட, இரவில் தூங்கும்போது கனவில், பாழடைந்த அரண்மனைக்குள் சிக்கிக்கொள்கிறார். அவரை பேய்கள் விரட்டுகின்றன. இதுபற்றி எக்ஸார்சிஸ்ட் ஏழுமலையிடம் (நாசர்) விசாரிக்கிறார். அவர், அதில்இருந்து தப்பிக்க ஒரு சாவியைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறுகிறார். ஒரு கட்டத்தில் கண்ணப்பனின் குடும்பமும் ரவுடி டெவில் ஆம்ஸ்ட்ராங்க் (ஆனந்தராஜ்), மருத்துவர் ஜானி (ரெடின் கிங்ஸ்லி) ஆகியோரும் இந்தப் பேய்களிடம் சிக்கிக் கொள்கிறார்கள். அந்த ‘ட்ரீம் கேட்சரி’ன் பின்னணி என்ன, பேய்களிடம் இருந்து அவர்கள் தப்பித்தார்களா, இல்லையா? என்பதுதான் காமெடி கலந்த 'கான்ஜுரிங் கண்ணப்பன்’.

வழக்கமாக இதுபோன்ற திகில் படங்களின் கதை, நிஜவாழ்வில் கதாபாத்திரங்கள் சிக்கிக்கொள்வது போலதான் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், இதன் கதை கனவில் நடக்கிறது. ‘ட்ரீம் கேட்சரி’ல் இருக்கும் இறகை யார் பறித்தாலும் அவர்கள் கனவில், பேய் அரண்மனைக்குள் சிக்கிக் கொள்வார்கள் என்கிற கான்செப்ட்டும் அதன் பின்னணியில் காமெடி ஹாரர் த்ரில்லரை யோசித்த இயக்குநர் செல்வின் ராஜ் சேவியரின் ஐடியாவும் புதுமையாக இருக்கிறது.

கனவில் அடிபட்டால், நிஜத்திலும் காயம் இருப்பது, அரண்மனையின் பின்னணியில் இருக்கும் பிரிட்டிஷ் அதிகார காதல், பயமுறுத்தும் பேய்கள், ஆனந்த ராஜ், விடிவி கணேஷ், கிங்ஸிலியின் காமெடி என ஒரு பக்கம் பிளஸ் பாயின்ட்டை அடுக்கினாலும் தாக்கத்தை ஏற்படுத்தாத நெகட்டிவ் பாயின்ட்ஸும் அதிகம்.

முதல் பாதியில், முதன்முதலாக அரண்மனைக்குள் கண்ணப்பன் சிக்கிக்கொண்டு தவிக்கும்போது ஏற்படுகிற பதற்றம், அடுத்தடுத்து குறைந்துவிடுகிறது. அதற்கு, இதுதான் நடக்கும் என்பதை எளிதாக யூகித்து விடக் கூடிய பலவீனமான திரைக்கதையே காரணம்.

பேய்களிடம் மாட்டித் தவிக்கும் போதும் குடும்பமே பேய் அரண்மனைக்குள் வந்து நிற்பதைக் கண்டு அதிர்ச்சியாகும் போதும் கவனிக்க வைக்கிறார் சதீஷ். வழக்கமான அம்மாவாக வரும் சரண்யா, யூடியூபராக வீட்டைச் சுற்றிக் காட்டி ரசிக்க வைக்கிறார். அஞ்சாநெஞ்சன் அப்பாவாக விடிவி கணேஷ், மாமா, சோடா சேகராக நமோ நாராயணன், மருத்துவர் ஜானியாக ரெடின்கிங்ஸ்லி, பாக்ஸர் டெவில்ஆம்ஸ்ட்ராங்காக ஆனந்தராஜ் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். டார்க் டேவ்ஸாக வரும் ரெஜினாவுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை. எக்ஸார்சிஸ்ட் ஏழுமலையாக வரும் நாசருக்கும் பெரிய வேலையில்லை.

ஹாரர் படங்களுக்கே உரிய த்ரில்லர் இசையை சிறப்பாகத் தந்திருக்கிறார், யுவன்சங்கர் ராஜா. நிஜ உலகத்துக்கும் கனவுலகத்துக்குமான வித்தியாசத்தை அருமையாகப் பதிவு செய்திருக்கிறது யுவாவின் ஒளிப்பதிவு. அரண்மனை, அதற்குள் அடைந்துகிடக்கும் சிலை உள்ளிட்ட பொருட்கள் என மோகன மகேந்திரனின் கலை இயக்கம் கவனிக்க வைக்கிறது. இரண்டு பாதியிலும் இன்னும் தாராளமாகக் கத்திரி வைத்திருக்கலாம் படத்தொகுப்பாளர் பிரதீப் இ.ராகவ்.

ஹாரர், காமெடி இரண்டையும் சமமாககலந்து வைக்க முயற்சித்த இயக்குநர் அதில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் காமெடியாகவும் ஹாரராகவும் ரசித்திருக்கலாம் இந்தக் கண்ணப்பனை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x