Published : 22 Nov 2023 04:56 PM
Last Updated : 22 Nov 2023 04:56 PM

“சேரி மொழியில் பேச முடியாது” - குஷ்பூ கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

சென்னை: “உங்களைப் போல சேரி மொழியில் என்னால் பேச முடியாது” என தனது எக்ஸ் தள பக்கத்தில் குஷ்பூ தெரிவித்த நிலையில் அவரது கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மன்சூர் அலி கான் சர்ச்சைப் பேச்சு தொடர்பாக எக்ஸ் தளத்தில் ஒருவருக்கு பதிலளித்த குஷ்பூ, “திமுக குண்டர்கள் இப்படியான மோசமான மொழியைத் தான் பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது இது தான். சாரி, என்னால் உங்களைப் போல சேரி மொழியில் பேச முடியாது. ஆனால் என்ன நடந்தது, என்ன பேசினார்கள், என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கண் விழித்துப் பாருங்கள். மேலும் திமுக உங்களுக்கு சட்டங்களை கற்றுத்தரவில்லை என்றால், நீங்கள் ஒரு வழக்கறிஞராக இருப்பது வெட்கக்கேடானது” என பதிவிட்டிருந்தார்.

அவரின் இந்த பதிவில், ‘சேரி மொழி’ என பயன்படுத்தப்பட்டிருப்பதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைத் சேர்ந்த கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், “நீங்கள் தவறிழைக்கிறீர்கள் குஷ்பூ. ‘Cheri language’ என்பதன் பொருளறிந்துதான் பயன்படுத்தினீர்களா? அறியாமல் என்றால் அந்த பதிவை நீக்கிவிடுங்கள். இரண்டாவதாதாக மன்சூர் அலிகான் வீட்டுப் பெண்களின் மேன்மை அவரின் நடத்தையின்பாற்பட்டதா? முதலாவது சாதி ஆதிக்கம். இரண்டவது ஆணாதிக்கம்” என பதிவிட்டுள்ளார்.

பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம், “குஷ்பூவின் ‘சேரி மொழி’ என்ற சொல்லை வன்மையாகக் கண்டிக்கிறோம். பெண்களை இழிவுப்படுத்தும் மோசமான வார்த்தைகளுக்கு ‘சேரி மொழி’ என முத்திரை குத்துகிறார். அவதூறு மற்றும் அவமரியாதையைக் குறிக்க இந்த வார்த்தையை இயல்பாக்கம் செய்வது ஒரு சமூகத்தின் வரலாறு மற்றும் கலாசாரத்தை புறக்கணிக்கும் செயல். இது ஏற்றுக்கொள்ள முடியாது; கண்டிக்கத்தக்கது. குஷ்பூ நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயத்ரி ரகுராம் தனது எக்ஸ் பக்கத்தில், “இதைச் சொல்வதில் எனக்கு எந்த உரிமையும் இல்லை, ஆனால் நான் என் தவறை உணர்ந்துவிட்டேன், நான் அதை மீண்டும் செய்ய மாட்டேன், அதன் உணர்வை அறியாமல் சேரி என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக நான் மிக அதிக வலியை உணர்ந்தேன். சேரி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நான் அனைவருக்கும் ஒரு பெரிய பாடமாக இருந்தேன், என் தவறுக்காக நான் தாக்கப்பட்டேன், இன்று வரை அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக நான் குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறேன். குஷ்பு தவறை உணர்ந்து ட்வீட்டை விரைவில் நீக்கிவிடுவார் என நம்புகிறேன். "சேரி மொழியை" பயன்படுத்தியதற்காக பொது மன்னிப்பு கேட்க வேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x