Published : 16 Oct 2023 03:59 PM
Last Updated : 16 Oct 2023 03:59 PM

“அவர்கள் விதைத்ததன் விளைவே இந்த கோஷம்” - ‘ஜெய் ஸ்ரீராம்’ சம்பவம் குறித்து அமீர் கருத்து

சென்னை: “மேல்தட்டு மக்களின் மூளைக்குள் என்ன விதைத்திருக்கிறார்கள் என்பதன் விளைவே இந்த கோஷம். விளையாட்டை விளையாட்டாகத்தான் பார்க்க வேண்டும்” என இயக்குநரும், நடிகருமான அமீர் கருத்து தெரிவித்துள்ளார்.

இயக்குநர் அமீரின் இரண்டாவது உணவகத்தின் திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் சேதுபதி கலந்துகொண்டு உணவகத்தை திறந்துவைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அமீரிடம், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உலகக் கோப்பை போட்டியின்போது பாகிஸ்தான் வீரர் ரிஸ்வானுக்கு எதிராக எழுப்பப்பட்ட ஜெய் ஸ்ரீராம் கோஷம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அமீர், “கடந்த 10 ஆண்டுகளாக ஒரு படித்த சமூகத்தை எப்படியாக மடைமாற்றியிருக்கிறார்கள் என்பதன் வெளிப்பாடாகத்தான் இந்தச் சம்பவத்தை பார்க்கிறேன்.

காரணம், அங்கே இருந்தவர்கள் யாரும் படிக்காத, பாமர, கடைநிலை ஊழியர்கள் கிடையாது. அங்கே அமர்ந்திருந்தவர்கள் எல்லோரும் மேல்தட்டு மக்கள். மேல்தட்டு மக்களின் மூளைக்குள் அவர்கள் என்ன விதைத்திருக்கிறார்கள் என்பதன் விளைவே இந்த கோஷம். விளையாட்டை விளையாட்டாகத்தான் பார்க்க வேண்டும். இந்திய கிரிக்கெட் என்பது இந்திய அரசால் உருவாக்கப்பட்டதல்ல. அது ஒரு கிரிக்கெட் வாரியம்.

அதேபோலே பாகிஸ்தான் கிரிக்கெட் என்பது பாகிஸ்தான் அரசால் உருவாக்கப்பட்டதல்ல. அது ஒரு கிரிக்கெட் வாரியம். அந்தந்த நாடுகளைச் சேர்ந்ததால் அப்படி சொல்கிறார்கள். வீரர்களை நாடு உருவாக்கவில்லை. அந்தந்த தனியார் நிறுவனம் அதனை உருவாக்கியிருக்கிறது. அது முழுக்க முழுக்க ஒரு வர்த்தகம். வர்த்தக்கத்தில் போய் உங்களின் தேச பக்தியை வெளிப்படுத்துவீர்கள் என்றால், உங்கள் அறியாமையை கண்டு நான் வருத்தப்படுகிறேன்” என்றார் அமீர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x