Published : 28 Sep 2023 05:57 AM
Last Updated : 28 Sep 2023 05:57 AM

ரம்பையின் காதல்: சமரசம் உலாவும் இடமே...

புராணக் கதைகளை மையப்படுத்தி தமிழில் பல திரைப்படங்கள் உருவாகி இருக்கின்றன. அதில் ஒன்று, ‘ரம்பையின் காதல்’. கே.சாரங்கபாணி, கே.எல்.வி.வசந்தா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் உட்பட பலர் நடித்து 1939-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் கதையை அப்படி எடுத்துக் கொண்டு, நடிகர்களை மட்டும் மாற்றி அதே பெயரில் மற்றொரு படத்தை உருவாக்கினார்கள் 1956-ல்.

இதில், ரம்பை பானுமதி, முத்தழகு தங்கவேலு, நாரதர் எம்.என்.நம்பியார், எமதர்மன் பாலையா, அரசர் எஸ்.வி.சுப்பையா, இளவரசி சுகுணாவாக எம்.என்.ராஜம், ஊர்வசியாக ஈ.வி.சரோஜா, அமைச்சர் அசோகன் உட்பட ஏகப்பட்ட நட்சத்திரக் கூட்டம். கல்பனா கலா மந்திர் சார்பாக ஆர்.ஆர்.சந்திரன் தயாரித்து இயக்கி, ஒளிப்பதிவு செய்த படம் இது.

இந்திரலோகத்து ரம்பை (பானுமதி), தோழிகளுடன் பூலோகத்தின் அழகை ரசிக்க வருகிறார். யமுனை நதியின் அழகில் மயங்கி அதிக நேரம் அங்கேயே தங்கிவிட, இந்திர சபைக்கு வராததால் இந்திரனுக்குக் கோபம். கங்கை கரையிலேயே சிலையாக நிற்கக் கடவாய் எனச் சாபமிடுகிறார். நாரதரின் பரிந்துரையால் சாபம் குறைகிறது. அதாவது காலையில் சிலையாக இருக்கும் ரம்பை, இரவில் தனது சுயவடிவத்தைப் பெறலாம். இந்திரன் கோபம் முழுமையாகத் தணியும் போது அவரது சாபமும் முழுமையாக வாபஸ் ஆகும். அந்த ஊரில் எல்லோராலும் கிண்டல் செய்யப்படும் முத்தழகுவின் கண்ணைக் கட்டி, போலியாகச் சடங்கு நடத்தி அந்தச் சிலையை மணமகள் என்று சொல்லி அவனுக்குத் திருமணம் செய்து வைத்துவிடுகிறார்கள். சிலையான ரம்பை அந்த கணவனைக் காதலிக்கத் தொடங்குகிறாள். கணவனை, பூமியில் இருந்து தேவலோகத்துக்கு அழைத்துச் செல்கிறார், ரம்பை. பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.

டி.ஆர்.பாப்பா இசையில் தஞ்சை ராமையா தாஸ், மருதகாசி பாடல்கள் எழுதியிருந்தனர். பாடலில்தான் படமே ஆரம்பிக்கும். ‘கட்டிவெல்லம் நீயே கட்டெறும்பு நானே’, ‘கலைஞானம் உறவாடும் நாடு’, ‘போடு டக்கு முக்கு டக்கு தாளம்’, ‘பக்தர் போற்றும் பத்ராச்சலனே’, ‘கண்ணு தெரிஞ்சு நடக்கணும்’, ‘சமரசம் உலாவும் இடமே’ உட்பட மொத்தம் 12 பாடல்கள். இதில் ‘சமரசம் உலாவும் இடமே’ உட்பட சில பாடல்கள் ஹிட்.

இந்தப் படத்தில் தங்கவேலு அடிக்கடி இழுத்துச் சொல்லும், ‘என்னடா இது?’ என்ற வசனம் அப்போது பிரபலம். இப்போது பார்த்தாலும் தங்கவேலு, பானுமதியின் நடிப்பு ஈர்க்கும் விதமாகவே இருக்கும். 1956-ம் ஆண்டு இதே தேதியில்தான் வெளியானது இந்தப் படம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x