Published : 11 Sep 2023 10:15 AM
Last Updated : 11 Sep 2023 10:15 AM

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் குளறுபடி - மன்னிப்பு கேட்ட ஏற்பாட்டாளர்கள்

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடி குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

சென்னை பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி நேற்று (செப்.10) நடைபெற்றது. திரையுலகில் தனது 30 ஆண்டுகால இசைப் பயணத்தை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சியை ஏ.ஆர்.ரஹ்மான் நடத்தினார். இதற்கான பொறுப்பு சென்னையைச் சேர்ந்த ஏசிடிசி என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இந்த இசை நிகழ்ச்சியில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலரும் உள்ளே கூட செல்ல முடியாமல் வெளியிலேயே நிறுத்தப்பட்டனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோல்டு, பிளாட்டினம், சில்வர் என டிக்கெட் வாங்கிய பலரும் இசை நிகழ்ச்சியை பார்க்காமல் வீடு திரும்பியதாக குற்றம்சாட்டியுள்ளனர். கூட்டம் கட்டுக்கடங்காமல் நிரம்பி வழிந்ததால் பலருக்கும் மயக்கம், மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். சமீபகாலங்களில் இப்படி ஒரு மோசமான நிகழ்ச்சி ஏற்பாட்டை பார்த்ததில்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்த குளறுபடி முழு பொறுப்பேற்று மன்னிப்புக் கோரியுள்ளது. அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது: சென்னை மக்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். இந்த அபாரமான வரவேற்பும், கட்டுக்கடங்காத கூட்டமும் எங்கள் நிகழ்ச்சியை பெரும் வெற்றியடையச் செய்துள்ளன. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாதவர்களிடம் நாங்கள் மனதார மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். இதற்கான முழு பொறுப்பையும் நாங்களே ஏற்கிறோம். நாங்கள் உங்களோடு இருக்கிறோம்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், நிகழ்ச்சியில் கலந்துகொள்ளமுடியாமல் போனவர்களுக்கு டிக்கெட் தொகை திருப்பியளிக்கப்படுமா என்பது குறித்து அந்நிறுவனம் எதுவும் தெரிவிக்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x