Published : 08 Jul 2014 06:25 PM
Last Updated : 08 Jul 2014 06:25 PM

ஜெயலலிதாவுடன் வார்த்தைப் போட்டியை விரும்பவில்லை: கருணாநிதி

நதிநீர்ப் பிரச்சினையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் வார்த்தைப் போட்டிக்கு வரவிரும்பவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கையில், "'அரைவேக்காடு யார்?' என்ற தலைப்பில் நான் 30-6-2014 அன்று எழுதிய கடிதத்திற்கு 7-7-2014 அன்று ஜெயலலிதா பதில் அளித்திருக்கிறார். அந்தப் பதிலில் வழக்கம் போல என்னை வீண் வம்புக்கு இழுத்திருக்கிறார்.

முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு ஆகிய அணைகள் 2012ஆம் ஆண்டு கேரளாவுக்குச் சொந்தம் என்று மாற்றப்பட்டதாக, கேரள சட்டசபையில் அந்த மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்து, ஏடுகளில் அந்தச் செய்தி வந்ததைக் குறிப்பிட்டு, அதற்கு தமிழகத்தின் பதில் என்ன என்று கூற வேண்டாமா என்று கேட்டிருந்தேன்.

இதற்கு ஜெயலலிதா, கேரள முதலமைச்சருக்குப் பதில் கூறாமல், நான் ஏதோ தெரியாமல் கேட்டு விட்டேன் என்று எண்ணிக் கொண்டு, என்னை 'அரைவேக்காடு' என்றெல்லாம் அநாகரிகமாகக் குறிப்பிட்டு பதில் அளித்திருந்தார். அதற்குத்தான் நான் விளக்கம் தெரிவித்து, அரைவேக்காடு யார்? நானா? ஜெயலலிதாவா? என்று கேட்டிருந்தேன்.

அவர் வெளியிட்ட அறிக்கையிலே நான்கு அணைகள் கேரளாவுக்குச் சொந்தம் என்று நான்தான் கூறியதைப் போல என்மீது பாய்ந்து பிறாண்டியிருக்கிறார். இந்த நான்கு அணைகளும் கேரளாவுக்குச் சொந்தம் என்று ஒரு தடவைக்கு இரண்டு தடவை கூறியிருப்பது கேரள முதல்வர் உம்மன் சாண்டி. தைரியம் இருந்தால், தெம்பு இருந்தால், நியாயம் இருந்தால் முதல்வர் ஜெயலலிதா, உம்மன் சாண்டிக்குப் பதில் சொல்ல வேண்டுமே தவிர, என் மீது ஆத்திரப்பட்டு என்ன பயன்? கேரள முதல்வர் இப்படியெல்லாம் சொல்லியிருக்கிறாரே, இதற்கு தமிழ்நாடு பதில் சொல்ல வேண்டாமா என்றுதானே கேட்டிருந்தேன். அது தவறா?

இப்போதாவது புரிகிறதா அரைவேக்காடு யார் என்பது? அரை வேக்காடுகூட இல்லை, தான் ஒரு அரைக்கால் வேக்காடு, கொதியே வராத வேக்காடு என்று அறிக்கை மூலம் நிரூபித்து இருப்பது ஜெயலலிதா என்பது ஊர்ஜிதம் ஆகிறதா அல்லவா? இதிலே எனக்கென்ன அரசியல் ஆதாயம்?

அடுத்து ஜெயலலிதா வழக்கம் போல, காவேரி நதி நீர்ப் பிரச்சினை, கச்சத் தீவுப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை என்று எப்போதும் அவர் என் மீது சாட்டுகின்ற குற்றச்சாட்டுகளையே திரும்பவும் தன் அறிக்கையில் எடுத்துக் கூறியிருக்கிறார். அந்தக் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் நான் திரும்பத் திரும்ப விளக்கம் அளித்து விட்டேன். அதையெல்லாம் திரும்ப மீண்டும் ஒரு முறை நான் எடுத்துக் கூற விரும்பவில்லை. தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல பாசாங்கு செய்பவர்களை எழுப்ப முடியுமா?

உண்மைகளையெல்லாம் அப்படியே மறைத்து விட்டு, நதி நீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற கருணாநிதி ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடவில்லை என்று கூறுவது எத்தகைய ஏமாற்றுத்தனம் என்பதை தமிழ்நாட்டு மக்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும். வாதங்களை எடுத்து வைக்கட்டும், நான் வேண்டாமென்று கூறவில்லை.

அரசியலிலே இருப்பவர்கள் தங்கள் தங்கள் வாதங்களை எடுத்து வைப்பதிலே தவறு இல்லை. ஆனால் முதல்வர் பொறுப்பிலே இருப்பவருக்கு ஒரு நாகரிகம் வேண்டாமா? பண்பாடு வேண்டாமா? வேறு எந்த மாநிலத்திலாவது எந்த முதலவராவது இப்படியெல்லாம் வார்த்தைகளை வாரி இறைப்ப துண்டா?

கேரள முதல்வர் இப்படியெல்லாம் கூறியிருக்கிறாரே, இதற்கு தமிழக அரசு பதில் கூற வேண்டாமா என்று பொறுப்புடன் நான் கேட்டால், அவருக்குப் பதில் கூறுவதை விட்டு என்னை அரை வேக்காடு என்றும், வாங்கிக் கட்டிக் கொண்டேன் என்றும் ஒரு முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டு எழுதுவது அவருக்கு வேண்டுமானால் சிறப்பாகத் தெரியலாம். ஆனால் அதே பாணியில் பதில் கூறுவதற்கு எனக்கு வெட்கமாக இருக்கிறது!

பெரியாரோடும், அண்ணாவோடும், ராஜாஜியோடும், காமராஜரோடும், பக்தவத்சலத்தோடும், காயிதே மில்லத்தோடும், ஏன் எம்.ஜி.ஆரோடும், அகில இந்திய அளவிலேகூட இந்திரா காந்தியோடும், சோனியா காந்தியோடும், மன்மோகன் சிங்கோடும் அரசியலை பண்பாட்டோடு நடத்திப் பழகி விட்டு, தற்போது குழாய் அடியிலே சண்டை போடுவதைப் போன்ற மொழியிலே பதிலளிக்க நான் தயாராக இல்லை.

என்னை மாத்திரமல்ல; தமிழ்நாட்டுத் தலைவர்களை மாத்திரமல்ல; அகில இந்தியத் தலைவர்களையெல்லாம் ஜெயலலிதா எப்படியெல்லாம் விமர்சித்தார் என்பதை நாட்டு மக்கள் அறியமாட்டார்களா என்ன? நெடுஞ்செழியனையே "உதிர்ந்த ரோமம்" என்று ஜெயலலிதா விமர்சிக்கவில்லையா? அத்வானியை "செலக்டிவ் அம்னீஷியா" என்று கூறவில்லையா? "செயல்படாத பிரதமர்" என்று நரசிம்மராவைப் பேசவில்லையா? ஆளுநராக இருந்த சென்னா ரெட்டி, ஜெயலலிதாவிடம் தவறாக நடக்க முயன்றார் என்று சட்டப்பேரவையிலேயே தெரிவிக்கவில்லையா? கம்யூனிஸ்டுகள் உண்டியல் குலுக்குவதற்காகத்தான் "தகர டப்பா"வே கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரிவிக்கவில்லையா?

இதெல்லாம் ஜெயலலிதாவுக்கு கை வந்த கலையாக இருக்கலாம்; என்னைப் பொறுத்தவரையில் நான் ஜெயலலிதாவுடன் இந்த அநாகரிக வார்த்தைப் போட்டிக்கு வரவிரும்பவில்லை.

கேரள முதல்வர் உம்மன் சாண்டி சொன்ன வார்த்தைகளை ஏற்க மறுத்து, தமிழ்நாட்டு மக்களுக்காக நான் வாதிட்டதற்காக - அதைப் புரிந்து கொள்ளும் சக்தியில்லாமல்; தேவையில்லாமல் ஜெயலலிதா என் மீது புழுதி வாரித் தூற்றியிருப்பது நியாயம்தானா என்பதை; இதைப் படித்து விட்டு நடுநிலையாளர்கள் சிந்தித்து தீர்ப்பு வழங்க வேண்டுகிறேன்" என்று கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x