Published : 14 Dec 2017 09:07 AM
Last Updated : 14 Dec 2017 09:07 AM

சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது: டிச.21-ம் தேதி வரை சுமார் 150 படங்கள் திரையிடல்

சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது. இந்த திரைப்பட விழா 8 நாட்கள் நடைபெற உள்ளது.

இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் நடந்தும் 15-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இன்று தொடங்குகிறது. தமிழக அரசின் ஆதரவுடன், தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் (என்எஃப்டிசி), ‘தி இந்து’ மெட்ரோ ப்ளஸ், ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் இணைந்து இந்த திரைப்பட விழாவை வழங்குகிறது. கலைவாணர் அரங்கில் இன்று மாலை நடக்கும் தொடக்க விழாவில் நடிகர் அரவிந்த்சாமி மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள், தயாரிப்பாளர்கள் சங்கப் பொறுப்பாளர்கள், திரைப்பட சம்மேளனத்தை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

டிச.21-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விழாவில் 50 நாடுகளைச் சேர்ந்த 150-க்கும் மேலான படங்கள் திரையிடப்பட உள்ளன. உலகப் படங்கள், ஜெர்மன், கொரியன், இந்தியன் பனோரமா, தமிழ்ப் பட பிரிவு, குறும்படங்கள் என்று பல்வேறு பிரிவுகளில் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

12 தமிழ்ப்படங்கள்

சென்னையிலுள்ள தேவி, தேவி பாலா, சத்யம், கேசினோ, அண்ணா, தாகூர் பிலிம் சென்டர், ரஷ்யன் சென்டர் ஆப் சயின்ஸ் & கல்சர் ஆகிய திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இதில் சிறந்த தமிழ்ப் படங்களுக்கான போட்டி பிரிவில் ‘8 தோட்டாக்கள்’, ‘அறம்’, ‘கடுகு’, ‘குரங்கு பொம்மை’, ‘மாநகரம்’, ‘மகளிர் மட்டும்’, ‘மனுசங்கடா’, ‘ஒரு கிடாரியின் கருணை மனு’, ‘ஒரு குப்பை கதை’, ‘தரமணி’, ‘துப்பறிவாளன்’ மற்றும் ‘விக்ரம் வேதா’ ஆ கிய 12 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவை தவிர இந்தியன் பனோரமா பிரிவில் கன்னடம், ஒரியா, பெங்காலி, ஹிந்தி உள்ளிட்ட இந்திய அளவிலான படங்கள் திரையிடப்படுகின்றன.

கலைவாணர் அரங்கில் நடக்கும் திரைப்பட தொடக்க விழா நிறைவு பெற்றதும் சிறப்பு திரைப்படமாக ‘தி ஸ்கொயெர்’ (The Square) படம் திரையிடவுள்ளது. இப்படம் நவீன கலை மற்றும் நவீன சமூகம் ஆகியவற்றில் உள்ள அரசியல் நிலைப்பாடு, வெளிப்பாட்டு சுதந்திரம் போன்றவற்றை கேள்விக்கு உட்படுத்துகிறது. இங்கு பல விஷயங்கள் அபத்தங்களாகவே உள்ளன எனக் கூறும் இப்படம் சமூக உணர்வுகள், நீதி சார்ந்த துணிச்சல், நிச்சயமற்ற உலகமெங்கும் பெருகிவரும் சுயநல எண்ணத்துடனேயே வாழும் வசதியான மனிதனின் தேவைகள் என பலவகையாக விரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x