Published : 09 Nov 2017 05:39 PM
Last Updated : 09 Nov 2017 05:39 PM

பிரபல ஒளிப்பதிவாளர் ப்ரியன் மரணம்

பிரபல ஒளிப்பதிவாளர் ப்ரியன் சென்னையில் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 55.

ப்ரியனின் இயற்பெயர் நாகேந்திரன். இவர் விருதுநகரைச் சேர்ந்தவர். தன் சித்தப்பா மூலம் நடிகர் பாலாஜியின் அறிமுகம் கிடைக்க அவர் வழியாக பாலுமகேந்திராவிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். 'மூன்றாம் பிறை', 'சந்தியராகம்', 'யாத்ரா', 'நீங்கள் கேட்டவை' என பாலுமகேந்திரா படங்களில் தொடர்ந்து பணியாற்றினார்.

ஒளிப்பதிவாளராக 'தெனாலி'யில் கமல் தொடங்கி 'வரலாறு' அஜித், 'வேலாயுதம்' விஜய், என்று விரிந்து விக்ரம், சூர்யா, விஷால், பிரசாந்த், சிம்பு, பரத் என்று பல முன்னணி நாயகர்களுடன் பணிபுரிந்திருக்கிறார்.

'தொட்டாசிணுங்கி', 'பொற்காலம்', 'தேசியகீதம்', 'வெற்றிக்கொடி கட்டு', 'ஆனந்த பூங்காற்றே', 'தெனாலி', 'ஸ்டார்', 'மஜ்னு', 'தமிழ்', 'பாலா', 'சாமி', 'கோவில்', 'அருள்', 'உதயா', 'ஐயா', 'ஆறு', 'வல்லவன்', 'திமிரு', 'தாமிரபரணி', 'வேல்', 'சேவல்', 'தோரணை', 'சிங்கம்', 'வேலாயுதம்', 'சிங்கம் 2', 'பூஜை', 'சிங்கம் 3' என ப்ரியன் ஒளிப்பதிவு செய்த படங்களின் பட்டியல் பெரிது.

இயக்குநர் ஹரியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் இவரே. 'வேங்கை' படத்தைத் தவிர ஹரியின் எல்லா படங்களுக்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். தற்போது படப்பிடிப்பில் இருக்கும் 'சாமி 2' படத்துக்கும் ப்ரியன்தான் ஒளிப்பதிவாளர்.

இந்நிலையில் ப்ரியன் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x