Published : 01 Aug 2023 09:21 PM
Last Updated : 01 Aug 2023 09:21 PM

ரசிகர்களின் கமென்ட்ஸ் எதிரொலி: ஃபேஸ்புக்கில் கவர் போட்டோவை நீக்கிய ஃபஹத் ஃபாசில்

ரசிகர்களின் கமென்ட்ஸ் எதிரொலியாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வைத்திருந்த ‘மாமன்னன்’ படத்துக்கான கவர் போட்டோவை நடிகர் ஃபஹத் ஃபாசில் நீக்கியுள்ளார்.

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூன் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாமன்னன்’. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருந்தார். படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இதன் எதிரொலியாக ரூ.35 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.50 கோடி வசூலை எட்டியது. கடந்த ஜூலை 27-ம் தேதி படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. திரையரங்குகளை விட ஓடிடியில் படம் வெளியான பிறகு அதன் தாக்கம் அதிகமாக இருந்தது.

‘மாமன்னன்’ படத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்துள்ள பகுதிகள் மட்டும் கட் செய்யப்பட்டு அதில் ‘சாதி’யத்தை பெருமைப்படுத்தும் பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு பாடல்கள் இணைக்கப்பட்டு எடிட் செய்யப்பட்டு வைரலாகின. இதன் ஒருபகுதியாக நடிகர் ஃபஹத் ஃபாசில் தனது ஃபேஸ்புக்கில் கவர் போட்டோவை நேற்று (ஜூலை31) மாற்றியிருந்தார். ‘மாமன்னன்’ படத்தில் அவரது கதாபாத்திர போட்டோக்களை கோலாஜ் செய்து வைத்திருந்தார்.

இந்நிலையில் அவரது கவர் போட்டோவுக்கு கீழ் ஏராளமான நெட்டிசன்கள் கமென்ட் செய்திருந்தனர். மேலும் சாதி ரீதியிலான கேள்விகள், பல்வேறு பாடல்களுக்கு எடிட் செய்யபட்ட வீடியோக்கள் என அவரது கமென்ட் முழுவதையும் நிரப்பியிருந்தனர். இதன் எதிரொலியாக ஃபஹத் ஃபாசில் தனது ஃபேஸ்புக் பக்கத்திலிருந்த கவர் போட்டோவையே மொத்தமாக நீக்கியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x