Published : 30 Jul 2023 05:50 AM
Last Updated : 30 Jul 2023 05:50 AM

திரை விமர்சனம்: டைனோசர்ஸ்

தனாவும் (ரிஷி) மண்ணுவும் (உதய் கார்த்திக்) அண்ணன் - தம்பிகள். இவர்களுடைய உயிர் நண்பன் துரை (மாறா). வடசென்னையின் பின் தங்கிய பகுதியொன்றில் வசித்தபடி, நல்லவன் வேடத்தில் தாதாவாக இருக்கும் சாலையார் (மானெக்‌ஷா) என்பவனிடம் அடியாளாக வேலை செய்த துரை, திருமணத்துக்குப் பின் திருந்தி வாழ்கிறான். இதைச் சகித்துக்கொள்ளாத சாலையார், தனது எதிரி தாதாவிடம் துரையைச் சிக்க வைத்து அவனைக் கொல்கிறான். இதற்குத் தன்னையறியாமல் மண்ணுவும் ஒரு காரணமாகிவிடுகிறான். குற்றவுணர்ச்சியால் துன்புறும் அவன், வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுக்காமல், தனது நண்பனின் கொலைக்குச் சாலையாரை எப்படிப் பழி வாங்கினான் என்பது கதை.

‘புதுப்பேட்டை’, ‘மெட்ராஸ்’ தொடங்கி வெற்றி மாறனின் ‘வடசென்னை’ வரை அப்பகுதியைப் பெரும் வன்முறைக் களமாகச் சித்திரித்துக் களைத்துப்போய்விட்டது தமிழ் சினிமா. ‘டைனோசர்ஸ்’ என்கிற மாறுபட்ட தலைப்புடன் வந்திருக்கும் இந்தப் படமும் அதே கதைக் களத்தைக் கொண்டிருந்தாலும் கதை சொன்ன முறை, கூஸ் பம்ப் காட்சியமைப்பு, உள்ளடக்கத்தை வன்முறைக்கு எதிரான பாதையில் திருப்பியது ஆகியவற்றால் தனித்த முயற்சியாக வெளிப்பட்டிருக்கிறது.

ஊர்க்காவலனாகக் காட்டிக்கொண்டு, உள்ளடியில் கொடூரமான குற்றவுலகைக் கட்டியாளும் சாலையார், தன்னை விட்டுப் பிரிந்து செல்பவர்கள், திருந்தி வாழ நினைப்பவர்களின் கதையை எப்படி முடித்துவிடுகிறான் என்பதைச் சித்திரித்த விதம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது. ‘தலைக்கு மேல பறந்துபோற விமானத்தோட நிழல் நம்ம ஏரியா மேல விழுது.. அந்த விமானத்துல நாமெல்லாம் ஏறிப்போகணும்டா..’ என நண்பர்களைத் தடுமாறவிடாமல் தன்வசப்படுத்தும் நாயகன், சாலையாரின் முகமூடியைக் கழற்ற முற்படும் ஒவ்வொரு நகர்வும் தரமான சம்பவம். வன்முறைக்குப் பதிலீடு வன்முறை அல்ல என்று நாயகன் தரும் இறுதித் தண்டனை முத்தாய்ப்பு.

படத்தின் தலைப்புக்கு நியாயம் செய்யும் டைனோசர் வரும் காட்சியும் அவ்வளவு பொருத்தம்.

ஒரு சில படங்களில் நடித்த, திறமையான புதுமுகங்கள், தேர்ச்சி பெற்ற நடிகர்களைப்போல் நடிப்பில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். குறிப்பாக துரையாக வரும் ‘ரிப்பரி’ படப் புகழ் மாறா, மண்ணுவாக வரும் உதய் கார்த்திக், அவர் அம்மாவாக வரும் ஜானகி, சாலையாராக வரும் மானெக்‌ஷா, அவர் எதிரி கிளியப்பனாக வரும் கவின் கே பாபு ஆகியோரின் நடிப்பும் சென்னைப் பேச்சு வழக்கும் கதைக் களத்துக்குள் உலவ வைக்கின்றன.

‘ஒரு வேலை வந்துகுது. ஆர்டர் என்னுது.. பார்டர் உன்னுது’, ‘நான் சாமி கும்புட கோயிலுக்கும் போனதில்லை; சம்பவம் பண்ணிட்டு ஜெயிலுக்கும் போனதில்ல’, ‘நைட்டுக்குள்ள அவன முடிக்கலேன்னு வை.. அவன்தான் வெயிட்டு’, ‘நம்ம ஏரியாலேர்ந்து சிரியா வரைக்கும் அதிகாரம்தான் பிரச்சினையாடா’ என படத்தில் மிக வலிமையான பங்கை ஆற்றியிருக்கிறது வசனம்.

மலிவுபடுத்தப்பட்டு, நோய்வாய்ப்பட்டுவிட்ட ஒரு கதைக்களத்துக்குச் சிகிச்சை அளிக்க முயன்றிருக்கும் அறிமுக இயக்குநர் எம்.ஆர்.மாதவனுக்கு நல்வரவு கூறி இந்த ‘டைனோசர்’ஸை வரவேற்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x