Published : 12 Jul 2023 05:02 PM
Last Updated : 12 Jul 2023 05:02 PM

புகழஞ்சலி | “மகத்தான படங்களை தமிழுக்குத் தந்தவர் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு” - கமல்ஹாசன்

கமல்ஹாசன், எஸ்.ஏ.ராஜ்கண்ணு | கோப்புப் படங்கள்

“மகத்தான திரைப்படங்களை தமிழுக்குத் தந்தவர்” என தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரசிகர்களின் மனதை விட்டு அகலாத பல மகத்தான திரைப்படங்களைத் தமிழுக்குத் தந்த கலையார்வம் மிக்க தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு மறைந்துவிட்டார். என் திரைவாழ்வின் முக்கியமான திரைப்படங்களான 16 வயதினிலே, மகாநதி ஆகிய படங்கள் அவரது தயாரிப்பில் உருவானவை. அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள இயக்குநர் பாரதிராஜா, “16 வயதினிலே’ திரைப்படத்தின் வாயிலாக என்னை இயக்குனராக அறிமுகம் செய்து, என் வாழ்வில் ஒளி விளக்கு ஏற்றிச் சென்ற என் முதலாளி S.A.ராஜ்கண்ணு மறைவு, பேரதிர்ச்சியும், வேதனையும், அளிக்கிறது. அவரின் மறைவு எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். ஆழ்ந்த இரங்கல்” என பதிவிட்டுள்ளார்.

நடிகை ராதிகா, “எஸ்.ஏ.ராஜ்குமார் என்னுடைய முதல் படமான ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் தயாரிப்பாளர். திரையுலகில் என்னுடைய பயணத்தில் மிகப்பெரிய பங்குவகித்தவர். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

எஸ்.ஏ.ராஜ்கண்ணு: கடந்த 1977-ஆம் ஆண்டு வெளியான ‘16 வயதினிலே’ படத்தின் மூலம் இயக்குநர் பாரதிராஜாவை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. ‘கன்னி பருவத்திலே’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘மகாநதி’ உள்ளிட்ட பல்வேறு படங்களை தயாரித்துள்ளார்.

மேலும், முன்னணி நடிகர்கள் பலரையும் தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் இன்று அவர் காலமானார். அவருக்கு வயது 77. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x