Published : 04 Jul 2023 10:08 AM
Last Updated : 04 Jul 2023 10:08 AM

‘மிஷன் இம்பாசிபிள்’ படத்துடன் வெளியாகும் ‘ஜவான்’ ட்ரெய்லர்

மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தின் ட்ரெய்லரை டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘மிஷன் இம்பாசிபிள்: டெட் ரெக்கனிங்' ஹாலிவுட் படத்துடன் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

‘பிகில்’ படத்துக்குப் பிறகு அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கான் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும், தீபிகா படுகோன், சஞ்சய் தத் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. முதலில் ஜூன் 2-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடையாததால் வரும் செப்டம்பர் 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்துகொண்டிருந்த நிலையில், சமீபத்தில் வெளியான ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வசூலை ஈட்டியது. இதனால் ‘ஜவான்’ படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், ‘ஜவான்’ படத்தின் ட்ரெய்லரை டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘மிஷன் இம்பாசிபிள்: டெட் ரெக்கனிங்' ஹாலிவுட் படத்துடன் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

மிஷன் இம்பாசிபிள் பட வரிசையில் ஏழாவது படமாக உருவாகியுள்ள ‘மிஷன் இம்பாசிபிள்: டெட் ரெக்கனிங்' வரும் 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x