Published : 19 Jun 2023 06:19 PM
Last Updated : 19 Jun 2023 06:19 PM

‘மாமன்னன்’ படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் - வடிவேலு நடித்துள்ள ‘மாமன்னன்’ திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், ஆனந்தி, பாயல் ராஜ்புத், யோகிபாபு மற்றும் பலர் நடிப்பில் 'ஏஞ்சல்' என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான படப்பிடிப்பு 2018ம் ஆண்டு துவங்கி 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. இருபது சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், 'ஏஞ்சல்' படத்தை நிறைவு செய்யாமல், 'மாமன்னன்' படத்தில் நடித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். மேலும், இந்த படம்தான் தனது கடைசி படம் என்று கூறியுள்ளார்.

'ஏஞ்சல்' படத்துக்காக இதுவரை 13 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. 'ஏஞ்சல்' படத்தை முடிக்காமல் மாமன்னன் படத்தை வெளியிட்டால் தமக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும்.
'ஏஞ்சல்' படத்துக்காக போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருகிறார்.

எனவே, 'ஏஞ்சல்' படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை உதயநிதி நிறைவு செய்து தர வேண்டும். 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும். அதுவரை 'மாமன்னன்' படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x