Published : 16 Jun 2023 05:43 PM
Last Updated : 16 Jun 2023 05:43 PM

“மரணத்தின் விளிம்புக்கே சென்று திரும்பினேன்” - அனுபவம் பகிர்ந்த நடிகர் ரோபோ சங்கர்

சென்னை: “5 மாதங்கள் படுத்த படுக்கையாக மரணத்தின் விளிம்புக்கே சென்றுவிட்டேன். அதற்கு காரணம், என்னிடம் இருந்த சில பல கெட்டப் பழக்கங்கள். அதில் அடிமையாகிவிட்டேன்” என போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சி ஒன்றில் கல்லூரி மாணவர்கள் முன்பு நடிகர் ரோபோ சங்கர் பேசியுள்ளார்.

காவல்துறை சார்பில் தனியார் கல்லூரி ஒன்றில் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரோபோ சங்கர், “சமீபத்தில் 4 மாதங்களாக என்னைப் பற்றிதான் யூடியூப்பில் பேச்சு ஓடிக்கொண்டிருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். தெரியாமல் கிளி வளர்த்துவிட்டேன். அது நம்முடன் பேசும் என நினைத்து வளர்த்தேன். அது என்ன கிளி என்று எனக்குத் தெரியாது. அந்தக் கிளியால் நான் பட்டபாடு பெரும்பாடு. அடுத்து என் உடலை எடை குறைப்பு குறித்து பேசிக்கொண்டிருந்தனர்.

காரணம், சினிமாவுக்காக நான் உடல் எடையை குறைத்தேன். மற்றொன்று அப்போது நான் மஞ்சள் காமாலை நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தேன். 5 மாதங்களாக படுத்த படுக்கையாக மரணத்தின் விளிம்புக்கே சென்றுவிட்டேன். அதற்கு, காரணம் என்னிடம் இருந்த சில பல கெட்டப் பழக்கங்கள். அதில் அடிமையாகிவிட்டேன். இந்த நிகழ்ச்சிக்கு இவர் ஏன் வந்திருக்கிறார் என நீங்கள் நினைப்பீர்கள். அதற்கு தகுதியான ஆள் நான். இப்போது நான் அறிவுரை சொல்லும் இடத்தில் இருக்கிறேன்.

மேலும், நான் உங்களுக்கு ஒரு பெரிய உதாரணமாகவும் இருக்கிறேன். வாழ்க்கையில் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கே கூட சென்றிருக்கிறேன். கடந்த ஜனவரி மாதம் வாழ்க்கையே வெறுத்து என்னால் அந்தப் பழக்க வழக்கமில்லாமல் இருக்கவே முடியவில்லை. ராத்திரியெல்லாம் எழுந்து கிறுக்கு போல திரிய ஆரம்பித்தேன். அப்போது நக்கீரன் கோபால் என்னை சரியான மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். என்னுடைய ரத்தத்தில் மஞ்சள் காமாலையின் பாதிப்பு இருந்ததும், கெட்டப் பழக்கங்களால் என்னுடைய உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டதையும் அறிந்தேன். மருத்துவரின் சரியான வழிகாட்டுதலை பின்பற்றி இரவு, பகலாக என்னை பார்த்துக்கொண்டது என்னுடைய குடும்பம் தான். இன்று என்னிடம் எந்த கெட்டப்பழக்கம் இல்லை. மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x