Published : 15 Jun 2023 05:22 AM
Last Updated : 15 Jun 2023 05:22 AM

‘சலார்’ என் கம்பேக் படமாக இருக்கும்: ஸ்ரேயா ரெட்டி நம்பிக்கை

‘திமிரு' படத்தில் ஈஸ்வரியாக மிரட்டிய ஸ்ரேயா ரெட்டி, இப்போது பிரசாந்த் நீலின் 'சலார்', பவன் கல்யாணின் பான் இந்தியா படமான 'ஓஜி' , வசந்தபாலனின் வெப் தொடர் என பிசியாகி விட்டார். "நான் பணத்துக்காகவோ, புகழுக்காகவோ நடிக்க வரலை. அதைத் தாண்டி எனக்கு சினிமா மேல காதல் இருக்கு. என் திறமையை வெளிப்படுத்தற மாதிரியான கதாபாத்திரங்கள்ல நடிக்கறதுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன்” என்கிறார் ஸ்ரேயா ரெட்டி.

‘ஓஜி’ கேங்ஸ்டர் படம்னு சொல்றாங்க. நீங்க எதிர்மறை கேரக்டர் பண்றீங்களா?

நிச்சயமா இல்லை. எல்லாருமே நான் அதுல நடிக்கிறேன்னதும் அப்படித்தான் நினைச்சிருப்பாங்க. அதுக்கு மேல, நடிகைக்கு கேரக்டர் இல்லையா என்ன? ஆனா, நான் என்னவா நடிக்கிறேங்கறதை இப்ப சொல்ல முடியாது. நான் நடிச்ச ‘சுழல்’ வெப் தொடர் பார்த்தீங்கன்னா, அதுல ஒரு குழந்தைக்கு அம்மாவா, வலிமையான கேரக்டர்ல நடிச்சிருந்தேன். ‘ஓஜி’ படத்துலயும் அதே போல, படம் முழுவதும் வர்ற கதாபாத்திரத்துல நடிச்சிருக்கேன். ஒரு கமர்சியல் படத்துல வர்றது போல இருக்காது. நடிப்பை வெளிப்படுத்த நிறைய வாய்ப்பு இருக்கு. அந்த கேரக்டர் வடிவமைப்பே அழகானது. 15 நாள் ஷூட்டிங் முடிஞ்சிருக்கு. இன்னும் ஷூட்டிங் இருக்கு.

பிரசாந்த் நீலின் பிரம்மாண்ட 'சலார்'ல நடிச்சிருக்கிறதா சொல்லியிருந்தீங்களே?

அது என்னோட 'கம்பேக்' படமா இருக்கும். ‘கே.ஜி.எஃப்’ படத்துல எப்படி ஓர் உலகத்தைக் காண்பிச்சாங்களோ, அதே போல இதுலயும் ஓர் உலகம் இருக்கு. பீரியட் படமா இருந்தாலும் 'சலார்' காட்டுற உலகத்துல அருமையான டிராமா இருக்கும். நடிகைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கேரக்டரை உருவாக்கி இருக்கார், பிரசாந்த் நீல்.

'திமிரு'ல வந்த ஈஸ்வரி, 'படையப்பா' நீலாம்பரி மாதிரி பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிறைய கதாபாத்திரங்கள் வந்திருக்கு. இதுல இருக்கிற கேரக்டர் அது மாதிரி இருக்குமா? அதுக்கும் மேலயா?ன்னு நான் சொல்ல முடியாது. அதை ரசிகர்கள்தான் முடிவு பண்ணணும். ஆனா, ஒரு நடிகைக்கு எழுதப்பட்ட சிறப்பானக் கதாபாத்திரம்னு இதை சொல்வேன். சுவாரஸ்யமான, ரசிகர்களுக்குப் பிடிக்கிற விஷயங்கள் அதிகமா படத்துல இருக்கும். இந்திய சினிமாவுக்கே இந்தப் படம் நிச்சயம் திருப்பத்தைத் தரும்.

ஸ்ரேயா ரெட்டின்னாலே, இன்னும் அந்த 'திமிரு' கேரக்டர்தான் எல்லாருக்கும் ஞாபகம் வருது... அதை மாத்துற மாதிரி அடுத்து படங்கள் அமையலையா?

அந்த வயசுல நான் அப்படி நடிச்சது எனக்கே ஆச்சரியம்தான். ஏன்னா அந்த மாதிரி ஒரு 'ரக்டு கேர்ள்' கதாபாத்திரத்தை யாரும் பண்ணமாட்டாங்க. இன்னைக்கு பார்க்கிற இளவயசு ரசிகர்கள் அந்த கேரக்டரை விரும்பறாங்க. ‘இப்படியெல்லாம ஒரு பொண்ணு இருப்பாங்க?’ன்னு ஆச்சரியமா பார்க்கிறாங்க. அதுமட்டுமில்லாம மீம்ஸ்ல அந்தப் போட்டோவை போட்டு டிரெண்ட் பண்ணிட்டு இருக்கிறதால, அந்த கேரக்டர் இன்னும் பேசப்படுதுன்னு நினைக்கிறேன். இதை மறக்கடிக்கிற மாதிரி ‘சலார்’ பாத்திரம் எனக்கு இருக்கும் அப்படிங்கறது என் நம்பிக்கை.

‘காஞ்சிவரம்’ மாதிரி படங்கள்லயும் நடிக்கிறீங்க, கமர்சியல் படங்கள்லயும் கவனம் செலுத்தறீங்க?

அதான் சொன்னேனே, எனக்கு பணம் நோக்கமல்ல. நான் நடிக்கிற படங்கள்ல மேக்கப் கூட போட்டுக்கிறதில்லை. ‘சலார்’ல போட்டிருக்கேன். ஏன்னா, அதுல வேறொரு உலகத்தை காட்டறாங்க. ‘ஓஜி’ படத்துல மேக்கப் இல்லை. ஒரு கேரக்டர் எனக்கு கொடுக்கப்பட்டா, நான் அதுவாகவே மாறிருவேன். அதுதான் நான். கண்ணீர் வடிக்கணும்னா கூட, கிளிசரின் தேவையில்லை. காஞ்சிவரம், வெயில் மாதிரி படங்கள் பண்ண எனக்கு எப்பவும் அதிக ஆர்வம் உண்டு.

வசந்தபாலன் இயக்கும் வெப் தொடர்ல உங்களுக்கு முதன்மை பாத்திரமாமே?

என் திறமையை வெளிப்படுத்தற கேரக்டர் அந்த தொடர்ல இருக்கு. அரசியல் டிராமாகதை. வசந்தபாலன் திறமையா எழுதி இருக்கார். அருமையா இயக்கியிருக்கார். தமிழ் ரசிகர்கள் இந்ததொடரை கண்டிப்பா அதிகமாக விரும்புவாங்க.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x