Last Updated : 14 Dec, 2018 04:03 PM

 

Published : 14 Dec 2018 04:03 PM
Last Updated : 14 Dec 2018 04:03 PM

மாற்றுப்பார்வையை முன் வைத்த மிக முக்கியமான படம்

|டிசம்பர் 15, ரஷிய கலாச்சார மையம், மாலை 6:00 மணி |

சாதியின் பெயரால் கருப்பிக்கும் பரியனுக்கும் நடக்கும் வன்முறை நிகழ்வுகளே 'பரியேறும் பெருமாள்'.

சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் அத்துமீறல்களையும், சமத்துவத்தை எதிர்பார்க்கும் இளைஞனின் நோக்கத்தையும் யதார்த்தமாகப் பதிவு செய்திருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜின் முயற்சி பாராட்டுக்குரியது.

நடிகனாக தன்னைப் பின்னிறுத்தி பரியேறும் பெருமாள் என்ற கதாபாத்திரத்தை முன்னிறுத்தி இருக்கிறார் கதிர். கருப்பி இழந்த சோகத்தை கண்களுக்குள் கொண்டு வரும் கதிர், தொடர் அவமானத்தைத் தாங்கும் விதம் நெக்குருக வைக்கிறது. பேராசிரியர்களை டீச்சர் என விளிப்பது, பிட் அடிக்க உதவிய அக்காவை தேவதை என வர்ணிப்பது, தனக்கு நடந்த அவமானத்தை யாருக்கும் சொல்லாமல் தவிப்பது, அப்பாவுக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டு பொங்குவது, தனக்கு எதிரான சதித்திட்டம் உணர்ந்து துரிதமாகச் செயல்படுவது என முழு அர்ப்பணிப்புடன் நடித்திருக்கிறார்.

கண் முன் நடக்கும் எந்த சம்பவத்தையும் அறிந்துகொள்ளாமல் சிரிக்கும் கண்களுடனே கடந்து செல்கிறார் ஆனந்தி. அன்பின் அடர்த்தியில் மீண்டும் மீண்டும் கதிரைத் தேடிச் சென்று காதலைக் கொட்டியிருக்கும் ஆனந்தியின் வெள்ளந்திப் பேச்சு அப்பழுக்கற்றது. நகைச்சுவை மட்டுமின்றி குணச்சித்ர நடிப்பிலும் யோகி பாபு முழுமையாய் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார். சுயசாதிக்கு எதிராக அவர் பேசும் வசனங்களுக்கு அப்ளாஸ் அள்ளுகிறது.

''நடிப்பு உச்சமா இருந்தாதான் பக்கத்துல வந்து நோண்ட மாட்டாங்க'' என்று லாஜிக் சொல்லும் சண்முகராஜன், மனசுக்குள் வன்மத்தை வைத்துக்கொண்டு வெளியில் வேற மாதிரி பேசும் மாரிமுத்து, வேறு ஒரு சமூகத்தைச் சார்ந்தவன் என்று தெரிந்ததும் பேருந்தின் இருக்கையிலிருந்து எழுந்து நிற்கும் கராத்தே வெங்கடேஷ், எந்த எல்லைக்கும் சென்று அவமானப்படுத்துவதையே குறிக்கோளாகக் கொண்ட லிஜிஷ், நடந்ததை உணர்ந்து அறிவுரை சொல்லும் கல்லூரி முதல்வர் 'பூ' ராமு உள்ளிட்ட அத்தனைப் பாத்திரங்களும் கச்சிதம்.

திருநெல்வேலி மாவட்ட மண்ணின் இயல்பை அப்படியே நிறம் மாறாமல் படம் பிடித்திருக்கிறார் ஸ்ரீதர். சந்தோஷ் நாராயணின் இசையில் கருப்பி, நான் யார், எங்கும் புகழ் துவங்க பாடல்கள் மனதை விட்டு நீங்காமல் வலியை ஏற்படுத்துகின்றன. இந்த மூன்று பாடல்களும் கதையோட்டத்துடன் மிக நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கின்றன. பின்னணி இசை படத்துக்கு மிகப் பொருத்தம்.

திருநெல்வேலி மண்ணின் மைந்தர்கள் குறித்தும் அந்த முகங்கள் குறித்தும் அச்சு அசலாக ஆவணப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்பட்ட, சித்தரிக்கப்பட்ட சாதி ஆணவக் கொலைகள் எல்லாம் பாசத்தின் உச்சம் என்ற மாயப் போர்வையிலோ அல்லது ஊருக்கு வெளியே சம்பந்தமில்லாத சிலரால் நிகழ்த்தப்படும் என்றோ காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். மாரி செல்வராஜ் அப்படியெல்லாம் சுற்றி வளைக்கவில்லை. குடும்பத்தில் ஒருவர், தெரிந்த முகமாய் இருப்பவர் கூட சாதிய ஆணவக்கொலையை எப்படிச் செய்கிறார் என்பதை மிக வெளிப்படையாகவும் துல்லியமாகவும் சொல்லியிருக்கிறார்.

அதே போல், குறிப்பிட்ட மையக் கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக்கொண்டே இயக்குநர் மாரி செல்வராஜ் கதையைக் கட்டமைக்கவில்லை. சாதிய வன்மத்துடன் திரியும் மனிதர்களின் முகங்களை, உள்ளுக்குள் குரூரத்துடனும் வெளியில் இயல்பாகப் பேசுவதாகப் பேசும் மனிதர்களின் தந்திர பாவனைகளை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.

கருப்பி பாடலில் சொல்லப்படும் அத்தனை உவமையும் நாய்க்கு மட்டும் அல்ல, தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கும் பொருந்திப் போகிறது. இறுதியில் அதுவே நாயகனுக்கான உருவமாக அமைகிறது. இறந்தது நீயா, இருப்பது நானா, இருப்பது நீயா, இறந்தது நானா, அழிஞ்சது நீயா, அழுவது நானா, அழுவது நீயா, அழிஞ்சது நானா என்ற கேள்விகளை மிக வலுவாக எழுப்பி இருக்கிறார். அவமானத்தின் உச்சத்தில் இருக்கும்போது வரும் நான் யார்? என்ற பாடல் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் ஒட்டுமொத்தக் குரலாக ஓங்கி ஒலிக்கிறது.

கருப்பியும், கதிரும் வேறுவேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான் என்றே இச்சமூகம் பார்ப்பதையும், சாதியும் மதமும்தான் மனிதனுக்கு விரோதிகள், சமத்துவம்தான் இங்கு தேவை, மனிதர்களை மனிதர்களாகப் பாருங்கள், நாயாகப் பார்க்காதீர்கள் என்றும் படம் முழுவதும் ஏதோ ஒரு வடிவத்தில் மாரி சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

மனிதாபிமானம் இல்லாமல் கொடும் செயல்கள் புரிந்த சாதிய மனோபாவத்தின் திமிரால் தான் பாதிக்கப்பட்ட அவலத்தை நண்பன் யோகி பாபுவிடமும், தோழி ஆனந்தியிடமும் கதிர் சொல்லவே இல்லை. இதன்மூலம் மனிதராக நடந்துகொண்டது யார், மனிதராக வேண்டியது யார் என்ற முக்கியமான அம்சத்தைக் குறித்து இயக்குநர் தெளிவுபடுத்துகிறார்.

இரண்டு டீ கிளாஸ்களைக் காட்டி முரண்களை மிக நேர்த்தியாகப் பதிவு செய்து முடித்த விதத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் வலிகளைப் பேசும் உளவியல் நுட்பங்கள் நிறைந்த அரசியல் சினிமாவாக 'பரியேறும் பெருமாள்' தனித்து மிளிர்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x