தீபாவளி: சிவகாசி பட்டாசு ஆலைகளில் இதுவரை 50% மட்டுமே உற்பத்தி

உற்பத்தியாளர்கள் கவலை
தீபாவளி: சிவகாசி பட்டாசு ஆலைகளில் இதுவரை 50% மட்டுமே உற்பத்தி
Updated on
1 min read

சிவகாசி: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலைகள் மூடல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 50 சதவீதம் அளவுக்கு மட்டுமே உற்பத்தி நடந்துள்ளது.

சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் 1,100-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. பேரியம் நைட்ரேட் பயன்படுத்த தடை, இணைப்பு வெடிகள் உற்பத்தி செய்யத் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளால் 60 சதவீதம் பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த ஆலைகளில் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை வடமாநில பண்டிகைகள், கோயில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மையப்படுத்தி ‘ஆப் சீசன்’ உற்பத்தி நடைபெறும்.

ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தீபாவளி சீசன் உற்பத்தி நடைபெறும். நாட்டின் மொத்த பட்டாசு தேவையில் 95 சதவீதத்துக்கு மேல் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 10 சதவீதம் தமிழகத்திலும், 90 சதவீதம் வெளி மாநிலங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்னதாகவே விற்பனை மும்முரமாக நடைபெற்றதால், 95 சதவீதத்துக்கு மேல் பட்டாசுகள் விற்பனையாகி, தமிழகத்தில் ரூ.450 கோடிக்கும், நாடு முழுவதும் ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பட்டாசு வர்த்தகம் நடைபெற்றது. இந்த ஆண்டு உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளுக்கு உற்பத்தி அனுமதி வழங்குவதில் ஏற்பட்ட காலதாமதம், வெடிவிபத்து, அதிகாரிகள் ஆய்வு, பட்டாசு ஆலைகள் மூடல் உள்ளிட்ட காரணங்களால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இதனால் தீபாவளிக்கு இன்னும் இரு மாதங்களே உள்ள நிலையில் 50 சதவீதம் அளவுக்கு மட்டுமே பட்டாசு உற்பத்தி நடந்துள்ளது. இதனால், இந்த ஆண்டு தீபாவளி விற்பனைக்கு மக்கள் அதிகம் விரும்பும் பேன்சி ரகம் உள்ளிட்ட அனைத்து பட்டாசு வகைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயரும் வாய்ப்பு உள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறியதாவது: பெசோ அமைப்பு சார்பில் 80 ஆலைகள், மாவட்ட நிர்வாகம் சார்பில் 49 ஆலைகள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் சார்பில் 128 ஆலைகள் என 257 பட்டாசு ஆலைகளில் உரிமம் சஸ்பென்ட் செய்யப்பட்ட நிலையில், அதில் 80 சதவீத பட்டாசு ஆலைகளுக்கு கடந்த வாரம் அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், தொடர் விடுமுறை மற்றும் மழைக்காலம் தொடங்க உள்ளதால் 45 நாட்களுக்கு கூட தொடர்ச்சியாக பட்டாசுகள் உற்பத்தி செய்ய முடியாத சூழல் நிலவுகிறது.

இந்த காரணங்களால் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 25 முதல் 30 சதவீதம் அளவுக்கு பட்டாசு குறையும். இதனால் தீபாவளி பண்டிகைக்கு அனைத்து வகை பட்டாசுகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயரும் அபாயம் நிலவுகிறது, என்றனர்.

தீபாவளி: சிவகாசி பட்டாசு ஆலைகளில் இதுவரை 50% மட்டுமே உற்பத்தி
அம்பேத்கர் படிப்பகம் முதல் ஏஐ பயிற்சி வரை: சமூக நீதித் துறையின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in