

சென்னை: சமூக நீதித் துறையின் சார்பில் 67 அறிவிப்புகளை அத்துறையின் அமைச்சர் வன்னி அரசு இன்று சட்டப்பேரவையில் வெளியிட்டார். அவற்றில் முக்கிய அறிவிப்புகள்:
> பள்ளி விடுதிகளுக்கு தற்போது மாதம் ஒன்றுக்கு வழங்கப்பட்டு ஒரு மாணவருக்கான உணவு கட்டணம் ரூ.1400-இல் இருந்து ரூ.1800 ஆக உயர்த்தியும், கல்லூரி விடுதி மாணாக்கருக்கு ரூ.1500-இல் இருந்து ரூ.2000 ஆக உயர்த்தியும் வழங்கப்படும். இதற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
> ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாணாக்கர் தங்கும் விடுதிகளின் ஆண்டு பராமரிப்புத் தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரம் ஆகவும், கல்லூரி விடுதிகளின் பராமரிப்புத் தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூபாய் ஒரு லட்சமாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
> ஆதிதிராவிடர் பழங்குடியின மாணாக்கர் தங்கி படிப்பதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கும் பொருட்டு 150 சமூக நீதி விடுதிகள் ரூபாய் ரு.160 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
> ஆதிதிராவிட மக்கள் அதிகம் வாழும் பகுதிகளை கண்டறிந்து அம்மக்களின் சமுதாய நிகழ்வுகளை மேற்கொள்ள ஏதுவாக 100 சமுதாயக் கூடங்கள் கட்டப்படும்.
> ஆதிதிராவிடர் பழங்குடியின மாணாக்கரின் மேம்பாடுக்காக சிறப்பாக பணிபுரிந்து வரும் பள்ளி ஆசிரியர்களை ஊக்குவிக்க ஆண்டுதோறும் அறிவொளி ஆசிரியர் விருது வழங்கப்படும். சிறப்பாக பணிபுரிந்து வரும் விடுதிக்காப்பாளர்களை ஊக்குவிக்க ஆண்டுதோறும் அறிவொளி காப்பாளர் விருது வழங்கப்படும்.
> ஆதிதிராவிட ,பழங்குடியின தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க கோயம்புத்தூரில் வணிக மையம் கட்டப்படும்.
> நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் செயல்படும் பழங்குடியினர் ஆய்வு மையத்தின் பணிகளை சென்னைக்கு விரிவுப்படுத்தும் வகையில் சென்னை நந்தனத்தில் பழங்குடியினர் பண்பாட்டு மையம் அமைக்கப்படும்.
> ஆதிதிராவிடர் பழங்குடியின மாணாக்கர் தனது அறிவுத் திறனை மேம்படுத்திக் கொள்ள பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் அம்பேத்கர் படிப்பகம் ஏற்படுத்தப்படும்.
> ஆதிதிராவிடர் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காகவும் தனித்துவமான நல அமைப்பாக சமூக நீதி நல வாரியம் அமைக்கப்படும்.
> சமூக நீதி துறையின் கீழ் செயல்படும் 23 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்.
> ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக உதவுவதற்காக சமூகநீதி அறக்கட்டளை உருவாக்கப்படும்.
> பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு லட்சம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடும்ப தலைவிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக விடிவெள்ளி மகளிர் வாழ்வாதார திட்டம் செயல்படுத்தப்படும்.
> தூய்மை பணியாளர்களுக்கு சொந்த வீடு வாங்க ‘அகம்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 2,500 கான்கிரீட் வீடுகள் வழங்கப்படும்.
> ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 90% மானியத்துடன் கூடிய விரைவு மின் இணைப்பு திட்டம் வழங்கும் வளமிகு வேளாண்மைத் திட்டத்தின் கீழ் ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்.
> வீடற்ற பழங்குடியினருக்கு 2000 கான்கிரீட் வீடுகள் கட்டித் தரும் வகையில் ‘உறையுள்’ பழங்குடியினர் குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
> வீடற்ற ஆதிதிராவிடர் குடும்பங்களுக்கு இனிய இல்லம் ஆதிதிராவிடர் குடியிருப்பு திட்டம் மூலம் 5,000 கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
> ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளுக்கு ரூபாய் 30 கோடி செலவில் 100 புதிய வகுப்பறைகள் கட்டித் தரப்படும்.
> தூய்மை பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கு ‘ஏற்றம்’ தூய்மை பணியாளர் குடும்ப வாழ்வாதார மேம்பாட்டு திட்டம் உருவாக்கப்பட்டு, வங்கிக் கடனுடன் 20% மானிய உதவி வழங்கப்படும். இத்திட்டம் ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்படும்.
> ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வீட்டுமனை வழங்கும் சமத்துவ வீட்டு மனை திட்ட அறிமுகப்படுத்தப்படும்.
> தேசிய நிறுவன பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கு வெற்றிவாகை போட்டித் தேர்வு பயிற்சி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
> ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரை தொழில் முனைவோராக மாற்றுவதற்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு இயக்கம் அமைக்கப்படும்.
> ஆதிதிராவிடர் பழங்குடியின விடுதி மாணவர்களுக்கு தீரம் விளையாட்டு ஊக்கத்திட்டம் செயல்படுத்தப்படும்.
> புதிய விளையாட்டுகளில் இளைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சிகரம் சிறப்பு விளையாட்டு திறன் மேம்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
> சீருடைப் பணி தேர்வுகளுக்கு இளைஞர்களை தயார் செய்யும் வகையில் இலக்கு சீருடை பணி தேர்வு பயிற்சி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
> பழங்குடியின வாழ்விட இயற்கை சூழலை கண்டுகளிக்க பூம்பொழில் தங்கும் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
> தனியார் நிறுவனங்களில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் வேலை வாய்ப்பினை ஊக்குவிக்கும் பொருட்டு சரிநிகர் சம வேலை வாய்ப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
> சமூக நீதி விடுதி மாணாக்கரின் விளையாட்டு மற்றும் கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் சிறகுகள் பல் திறன் குழுக்கள் அமைக்கப்படும்.
> ஆதிதிராவிடர் பழங்குடியினர் விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
> பழங்குடியின குழந்தைகளுக்கு தரமான சத்தான உணவு வழங்கும் வகையில் 250 பழங்குடியின குடியிருப்புகளில் சிறப்பு அங்கன்வாடி மையங்கள் புதிதாக உருவாக்கப்படும்.
> பழங்குடியின மக்களின் பண்பாடு, கலாச்சாரம், வாழ்க்கை நடைமுறைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு தடம் பழங்குடியின மரபுநடை என்ற கலாச்சார பயண நிகழ்ச்சி நடத்தப்படும்.
> இயற்கை முறை விவசாயத்தை கடைபிடிக்கும் பழங்குடியின விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு மண்வளம் பழங்குடியின அங்கக வேளாண்மை உற்பத்தி திட்டம் செயல்படுத்தப்படும்.
> ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி மற்றும் விடுதி வளாகத்தில் பசுமை தோட்டம் உருவாக்கப்படும்.
> பழங்குடியின பெண்களுக்கு சூரிய ஆற்றல் மூலம் சோலார் அடுப்புகள் மற்றும் இதர வசதிகள் ஏற்படுத்தப்படும்.
> சமூக நிதி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணக்கருக்கு வேலைவாய்ப்பு திறனை வளர்க்க வெற்றிப் பாதை திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
> நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய ஆறு மாவட்டங்களில் பழங்குடியின மரபு வழி மூலிகை மருத்துவ பாதுகாப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
> பழங்குடியின விளைபொருள்களுக்கு முல்லை என்ற தனித்த அடையாளத்துடன் கூடிய மதிப்பு கூட்டல் அலகுகள் நிறுவப்படும்.
> பழங்குடியின மக்களின் சிறுதானிய விதைகளை ஆவணப்படுத்துவதற்காக மரபு விதை பாதுகாப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
> சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் பழங்குடியினர் வள மையம் உருவாக்கப்படும்.
> ஆதிதிராவிடர் பழங்குடியின மக்களின் பொருளாதார மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில் சிறப்பு கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்படும்.
> ஆதிதிராவிடர் பழங்குடியின இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் வெற்றிப்படி திட்டம் செயல்படுத்தப்படும்.
> பழங்குடியினர் நலனுக்காக தமிழ்நாடு பழங்குடியினர் நிதி மேம்பாட்டு குழுமம் உருவாக்கப்படும்.
> தூய்மை பணியாளர் நலனுக்காக தமிழ்நாடு தூய்மை பணியாளர் நிதி மேம்பாட்டு குழுமம் உருவாக்கப்படும்.
> 10,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவுத் திறன் பயிற்சி வழங்கப்படும்.
> பழங்குடியின மொழிகள் குறித்து அறிந்து கொள்ள பழங்குடியினர் ஆய்வு மையம் மூலம் சான்றிதழ் வகுப்புகள் நடத்தப்படும்.
> வணிக வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான கடன் வசதி எளிதில் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
> தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளையும், தேவைகளையும் நிவர்த்தி செய்ய ஏதுவாக தூய்மை பணியாளர் நலக்குழு உருவாக்கப்படும்.
> பழங்குடியினர் நலனுக்காக பழங்குடியின மக்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் பழங்குடியினர் நலக்குழு உருவாக்கப்படும்.
> ஆதிதிராவிடர் பழங்குடியின இளைஞர்களை கலைத்திறனில் ஊக்குவிக்க கலை பட்டறை மூலம் நவீன கலைத்திறன் பயிற்சி வழங்கப்படும்.
> ஊடகத்துறையில் இளம் திறமைகளை ஊக்குவிக்க உட்பயிற்சி உதவித் தொகை வழங்கும் ஊடகத் திறன் ஊக்குவிப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
> ஆசிரியர் மற்றும் காப்பாளர்களுக்கு புத்துணர்வு பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படும்.
> சமூக நீதி விடுதிகளில் சுகாதாரமான வளாகத்தினை உருவாக்கும் நோக்குடன் கொசுவலை அமைக்கப்படும்.
> சமூக நீதி விடுதிகளுக்கு இன்வெர்ட்டர் மற்றும் தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகள் அமைக்கப்படும்.
> சமூக நீதி விடுதி மாணாக்கருக்கு ஆங்கில மொழி திறன் பயிற்சி மற்றும் பயிற்சி பொருட்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்