

மதுரை: மதுரை விமானநிலையத்துக்கு சர்வதேச அந்தஸ்து கிடைத் துள்ள நிலையில், அதற்கான வரவேற்பும், கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
மதுரை விமான நிலைய இயக்குநர் முத்துக்குமார் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: மதுரை விமான நிலைய ஓடுதளம் 1942-ம் ஆண்டு முதல் சென்னையில் இருந்து மதுரைக்கு அச்சிட்ட செய்தித்தாள்களைக் கொண்டு வருவதற்காக செயல்பட்டது.
1952-ல் சிவில் விமான நிலையமாகவும், 1957-ம் ஆண்டு வணிக நடவடிக்கை யையும் தொடங்கியது. 2011-ல் சுங்க விமான நிலையமாக அறிவிக்கப்பட்டு, சர்வதேச நடவடிக்கையை தொடங்கியது. 2012, செப். முதல் இலங்கைக்கு முதல் விமான சேவை தொடங்கியது.
தென்னிந் தியாவின் முக்கிய சுற்றுலா, வணிக மையமான மதுரை, விமானப் போக்குவரத்தில் இந்தியப் பெருநகரங்களுடன் இணைக்கப்பட்டது. 2024-ம் ஆண்டு அக். 1 முதல் மதுரை விமான நிலையத்தில் 24 மணிநேர சேவை தொடங்கப்பட்டது.
இவ்விமான நிலைய மொத்த நிலப்பரப்பு 1,045 ஏக்கர். இதில் 17,560 சதுர மீட்டரில் முனைய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. உச்ச நேரங்களில் 1,230 பயணிகளை இந்தக் கட்டிடத்தில் தங்க வைக்கலாம்.
2024-25-ம் ஆண்டில் இங்கு 13,513 விமா னங்கள் இயக்கக்கப்பட்டு 1.39 மில்லியன் பயணிகள் கையாளப்பட்டுள்ளனர். ஏர்பஸ் 321 வகை விமானங்கள் வந்து இறங்குவதற்கு ஏற்ப 2,285 மீட்டர் ஓடுபாதை நீளத்துடன், மதுரை விமான நிலையம் 12 பார்க்கிங் கட்டமைப்பு வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பைக் கொண்டுள்ளது.
இந்திய விமான நிலைய ஆணைய (AAI) நிறுவனத் தலைமையகத்திலிருந்து பெறப்பட்ட அறிவுறுத்தலின்படி மத்திய அமைச்சரவைக் குழுவால் அங்கீகரித்தபடி மதுரை விமான நிலையம் இன்று (மார்ச் 10) முதல் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் விக்கிஷித் பாரத் 2047-ன் தொலைநோக்கு பார்வைக்கேற்ப உலகுக்கு, மதுரை விமான நிலையத்தின் கதவுகளைத் திறப்பதன் மூலம் மதுரை சர்வதேச விமான பயணத்துக்கான முக்கிய மையமாக மாற வழிவகுக்கும்.
மதுரையிலிருந்தும், மதுரைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கையும் இதனால் இன்னும் அதிகரிக்கும். மதுரை விமான நிலையம் இந்தியாவுக்குள் மட்டுமின்றி சர்வதேச நகரங்களுக்கும் இணைப்புகளை எளிதாக்க உதவும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மதுரை உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக் குழும சங்க ஆலோசகர் டாக்டர் மகேந்திர வர்மன் கூறியதாவது: மதுரை உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (MID), மதுரை விமான நிலையத்தைச் சுங்க விமான நிலையத் திலிருந்து சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த மத்திய அமைச்சரவை வழங்கிய ஒப்புதலை வரவேற்கிறது.
இது தென் தமிழகத்தின் நீண்டகாலக் கோரிக்கையாகும். இதற்காக பிரதமர் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு நன்றி தெரி வித்துக் கொள்கிறோம். இந்த நடவடிக்கை பிராந்திய இணைப்பை மேம்படுத்தும், வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை ஊக்குவிக்கும். மேலும் தென் தமிழகத்தின் தொழில்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளிக்கும்.
அடுத்தகட்ட முக்கிய நகர்வுகள்
இருதரப்பு விமான சேவை ஒப்பந்தங்கள், ஆசியான் மற்றும் வளைகுடா நாடுகளுடனான இருதரப்பு ஒப்பந்தங்களில், மதுரையைச் சேர்ப்பது இந்த மாற்றத்துக்கு முழுமையான அர்த்தத்தை அளிப்பதோடு, மதுரை விமான நிலைய வளர்ச்சிக்கும் உதவும்.
மத்திய அரசு 11 ஆசியான் நாடுகளுக்கு வழங்கியுள்ள 18 சுற்றுலா நகரங்களின் பட்டியலில் மதுரையைக் குறிப்பாக ஒரு பாய்ன்ட் ஆஃப் கால் ஆக சேர்ப்பதே அடுத்த முக்கியமான படி.
இந்த ஒரு நடவடிக்கை மூலம் மதுரைக்கும் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவையை தொடங்க முடியும். இந்த நாடுகளில் தென் தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் வர்த்தகம், வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்காகக் குடி யேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வெற்றிகரமாகப் பெறப்பட்ட நிலையில், மதுரையைச் சேர்ந்த வர்த்தக அமைப்புகள், சங்கங்கள், தொழிலதிபர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, ஆசியான் மற்றும் வளைகுடா நாடுகளுடனான இருதரப்பு ஒப்பந்தங்களில் மதுரையைச் சேர்க்க முயற்சிக்க வேண்டும் என்று கூறினார்.