

பிகானிர்: அமெரிக்கா, ஈரான் இடையிலான போர் காரணமாக ராஜஸ்தானின் பிகானிரில் இருந்து ஏற்றுமதியாகும் புஜியா, அப்பளம் மற்றும் மசாலாப் பொருட்களின் வர்த்தகம் முடங்கியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பிகானிர் கார வகை தின்பண்டங்கள் தொழிலுக்குப் பெயர் பெற்று விளங்குகிறது. இங்கிருந்து வளைகுடா நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு புஜியா, அப்பளம் ஆகிய தின்பண்டங்கள் மற்றும் மசாலாப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், அமெரிக்கா, ஈரான் இடையிலான போர் காரணமாக சரக்குக் கப்பல் வருகை தாமதம், சரக்குக் கட்டண உயர்வு மற்றும் கன்டெய்னர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இத்தகைய பொருட்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து பிகாராம் குழுமத்தைச் சேர்ந்த புஜியா வர்த்தகர் ஆஷிஷ் அகர்வால் கூறும்போது, ‘‘உற்பத்தி மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்து வருவது தின்பண்ட தொழில் துறையைப் பாதிக்கிறது. போரினால் சரக்குக் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளன. மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சமையல் எண்ணெய் விலை சுமார் 20 சதவீதம் உயர்ந்துள்ளது. இது நேரடியாக உற்பத்தியைப் பாதிக்கிறது. முன்பு 30 நாட்களில் சென்றடைய வேண்டிய சரக்குகள், இப்போது போர் காரணமாக பாதுகாப்பான நீண்ட தூரப் பாதைகளில் செல்வதால் 60 நாட்கள் வரை ஆகிறது’’ என்றார்.
மற்றொரு ஏற்றுமதியாளர் ராஜேஷ் ஜிண்டால் கூறும்போது, ‘‘சரக்குகள் வருவதும் போவதும் தாமதமாவதால் வர்த்தகர்களுக்கு நிதி நெருக்கடி அதிகரித்துள்ளது. அரபு நாடுகளில் பிகானிர் தின்பண்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால், விநியோகச் சங்கிலி முடங்கியுள்ளதால் நஷ்டம் ஏற்படுகிறது’’ என்றார்.
ஏற்றுமதி மட்டுமின்றி, பாமாயில் மற்றும் சோயா பீன்ஸ் போன்ற முக்கிய மூலப்பொருட்களின் இறக்குமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வால் பேக்கேஜிங் செலவுகள் 30 - 40 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் இது உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.