

திருச்சி: அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பிளாஸ்டிக் பாட்டில்கள் விலை அதிகரித்துள்ளது.
குறிப்பாக 1 லி. குடிநீர் பாட்டில் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. இந்தப் போரால் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
பொதுவாக, பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க கச்சா எண்ணெய்யில் இருந்து தயாரிக்கப்படும் பெட்ரோ ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படும். தற்போது அமெரிக்கா- ஈரான் போரால் அதற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பாலி எத்திலீன், பிவிசி, பாலிபுரோப்பிலீன், பாலிஸ்டிரீன் போன்றவற்றின் விலை சுமார் 40 சதவீதம் உயர்ந்துள்ளது. இதையடுத்து, மினரல் வாட்டர் பாட்டில், வீட்டு உபயோக பிளாஸ்டிக் பொருட்கள், மருத்துவ பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளது.
குறிப்பாக பிளாஸ்டிக் பாட்டில் தயாரிக்க பயன்படும் கண்ணாடி போன்ற மினுமினுப்பு தன்மை கொண்ட பாலி எத்திலீன் டெரெப்தலேட் விலை ஒரு கிலோ ரூ.123-ல் இருந்து ரூ.210 ஆக உயர்ந்துவிட்டது.பேக்கிங் பிளாஸ்டிக் பேப்பர் விலை கிலோ ரூ.140-ல் இருந்து ரூ.240 ஆக உயர்ந்துவிட்டது.
இதனால், நேற்று முன்தினம் வரை ரூ.8-க்கு விற்பனை செய்யப்பட்ட 200 மில்லி லிட்டர் குடிநீர் பாட்டில் விலை இன்று ரூ.10-க்கும், ரூ.10-க்கு விற்கப்பட்ட 300 மிலி குடிநீர் பாட்டில் ரூ.12-க்கும், ரூ.12-க்கு விற்பனையான 500 மிலி குடிநீர் பாட்டில் ரூ.16-க்கும் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பாட்டில் ரூ.25-க்கும், ரூ.30-க்கு விற்ற 2 லிட்டர் பாட்டில் ரூ.35-க்கும், ரூ.50-க்கு விற்பனையான 5 லிட்டர் குடிநீர்பாட்டில் ரூ.70-க்கும், மறுமுறை பயன்படுத்தப்படும் கேன்களில் அடைக்கப்பட்ட 20 லிட்டர் குடிநீர் ரூ.45-ல் இருந்து ரூ.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் போர் தொடரும்பட்சத்தில் இந்த விலையேற்றமும் தொடரும் என்று தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அச்சங்கத் தலைவர் கண்ணன் கூறும்போது, “ஒருமுறை குடிநீர் பாட்டிலில் விலையை உயர்த்தினால் அடுத்த 4 ஆண்டுகளுக்கு அந்த விலையேற்றம் நிலையானதாக இருக்கும். ஆனால் தற்போதைய நிலையில், மூலப்பொருள்களின் தொடர் விலையேற்றத்தால் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் பாட்டில்களின் விலையை உயர்த்த வேண்டியுள்ளது.
குடிநீரை அடைத்து விற்பனை செய்யும் தொழிலை பாதுகாக்க பிளாஸ்டிக் பாட்டில்களை மத்திய, மாநில அரசுகள் கொள்முதல் செய்ய வேண்டும். நியாயமான நிலையான விலையில் பாட்டில் குடிநீர் பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்கும் மேலாக பிளாஸ்டிக் பாட்டில்கள், மூடிகள் தயாரிப்பதற்கு உரிய மூலப்பொருட்களை தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்’’ என்றார்.