

சென்னை: சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் 2,602 செல்போன்கள் வைக்கப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்த அதிமுக வழக்கறிஞரணி செயலாளர் இன்பதுரை, தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் 2,604 செல்போன்கள் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
அவற்றை அங்கன்வாடி பணியாளர், ஊரக வேலைத்திட்ட மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு கொடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்தது.
அந்த செல்போன்களை திமுகவே வழங்கியிருக்குமோ என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது இது குறித்து விசாரிக்க வலியுறுத்தி தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட விளக்கம்: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே மார்ச் 13-ம் தேதி அங்கன்வாடி பணியாளர்களுக்கு 2,696 செல்போன்கள் அரசிடமிருந்து வரப்பெற்று, ஆட்சியர் அலுவலக 2-ம் தளத்தில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
நடத்தை அமலுக்கு வந்ததால், அந்த அறை பூட்டி வைக்கப்பட்டு, அதன்சாவி மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.எனவே நடத்தை விதிகள் மீறி அங்கன் வாடிபணியாளர்களுக்கு புதிய செல்போன்கள் வழங்கப்பட்டதாக வந்த புகாரில் உண்மை இல்லை. தேர்தல் நடத்தை விதிகளும் மீறப்படவில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.